பக்கம்:மயில்விழி மான்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

மயில்விழி மான்

எல்லாம் வேறு எங்கேயோ போய்விடும். அச்சமயம் பார்த்துதான் அநேகமாக வருவார்கள். அவர்கள் திடீரென்று வந்து தாக்க முடியாமலிருப்பதற்காகவே தமிழர்கள் அவ்வளவு பெரிய கோட்டைக் கொத்தளங்கள் கட்டிக் கொண்டு வசிக்கிறார்கள். அது மட்டுமின்றி, எப்போதுமே கோட்டைச் சுவர்கள் மீதும் பாறை உச்சிகளிலும் காவற்காரர்களை நிறுத்தி வைப்பது வழக்கம். இவ்வளவு பாதுகாப்புகளையும் சில சமயம் அந்த அரக்கர்கள் தாண்டிக் கொண்டு வந்து தமிழர்கள் சிலரைப் பிடித்துப் போய்விடுவது உண்டு. அப்போது எல்லாம் தமிழர்கள் வசித்த அமுதத் தீவில் அழுகைச் சத்தம் கிளம்பும்; அரக்கர் தீவிலே கோலாகலமாய் இருக்கும்.

இந்த விவரங்களையெல்லாம் சொல்லிவிட்டு இளஞ்சென்னி நெடுஞ்செழியன் சேரலாதர், "ஐயா மதிவாணரே! தமிழ் ஆனாலும் மிக 'அபாயகர' மான மொழி! அதன் இனிமையே அதற்கு இவ்வளவு அபாயத்தை அளித்திருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டில் இப்போது ராட்சஸர்களின் தொல்லை அடியோடு இல்லையென்றா சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்.

"ஆமாம்; உண்மையாகவே கிடையாது. நீங்கள் புறப்பட்டு வந்த சில நாளைக்கெல்லாம் இராமர் என்பவர் வந்து இராவணாதி ராட்சஸர்களை அடியோடு ஒழித்து விட்டார்! ஆனால் இந்த நாளில் சிலர் 'நாங்கள் இராவணனுடைய சந்ததிகள்' என்று சொல்லிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்! அவர்கள் இராவண பூஜை செய்கிறார்கள்! தமிழைத்