பக்கம்:மயில்விழி மான்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

மயில்விழி மான்

லாம் பறந்துவிட்டது. நான் சீர்காழி வரையில் போய்த்திண்டாடிவிட்டுத் திரும்பியதைப் பற்றிச் சொன்னேன். அவர் புயலினால் அந்தப் பக்கத்தில் விளைந்த சேதங்களைப்பற்றிச் சொன்னார். பிறகு,

"இன்னல் கூட்டி இன்பம் ஊட்டி

இந்திர ஜால வித்தை காட்டி"

என்று முனகும் குரலில் பாடி நிரவல் செய்யத் தொடங்கினார். திடீரென்று நிரவலை நிறுத்தி, "ஆமாம்; ஆண்டவனுக்கு இதெல்லாம் இந்திர ஜால வித்தை; அநுபவிக்கிற நமக்கோ சொல்லமுடியாத அவஸ்தை!" என்று சொன்னார்.

ஏதோ ஒரு கதையை மனதில் வைத்துக் கொண்டு தான் அவர் இப்படிப் பேசுகிறார் என்று ஊகித்துக் கொண்டேன். (ஐயம்பேட்டை கந்தப்பன் தம் வாழ்க்கையில் கண்டு கேட்ட வரலாற்றைத்தான் சொல்லுவார். ஆனால் அந்த வரலாறு கதையைக் காட்டிலும் அதிசயமாக இருப்பது வழக்கம். அதனாலேயே கதை என்று குறிப்பிடுகிறேன்.)

அவருடைய மனதில் உள்ளதை எப்படி வெளியே கொண்டு வருவது என்று யோசித்தேன்.

"பிள்ளைவாள்! நீங்கள் முன்னொரு தடவை சொன்ன 'வீணை பவானி' கதையை ரேடியோவில் நாடகமாகப் போட்டார்களே கேட்டீர்களா?" என்றேன்.

"உலக வாழ்க்கையே நாடகம். அதிலே சிலர் அரங்க மேடையில் ஏறி நாடகம் ஆடுகிறார்கள். அப்-