பக்கம்:மயில்விழி மான்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகக்காரி

55

இதையெல்லாம் கேட்டு எனக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. அந்தக் குழந்தையின் நிலைமை இப்படியா இருக்க வேண்டுமென்று இரங்கினேன். ஆனாலும், இம்மாதிரி இடங்களுக்கு உதவி செய்வதாக எண்ணிப் போனாலும் ஏதாவது சங்கடத்தில் வந்து முடியும் என்று நினைத்து அங்கே போகும் எண்ணத்தை விட்டுவிட்டேன். உள்ளூரிலும் சரி, வெளியூரிலும் சரி, கடவுள் அருளால் எனக்கு நல்ல அந்தஸ்து ஏற்பட்டிருந்தது. கௌரவம் வாய்ந்த பெரிய மனிதர்களின் சிநேகமெல்லாம் கிடைத்திருந்தது. அசட்டுத்தனமாக எங்கேயாவது போய்க் காலை விட்டுக் கொண்டு வீண் தொல்லைக்கு ஆளாகக்கூடாது என்று மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

இந்த உறுதியில் நிலைத்திருந்தேனானால் பின்னால் எவ்வளவோ சங்கடங்களுக்கு உள்ளாகாமல் தப்பித்துக் கொண்டிருப்பேன். அந்தச் சின்னஞ்சிறு குழந்தை ஒரு நிமிஷத்தில் என் மன உறுதியைக் குலைத்து விட்டது. நான் தங்கியிருந்த ஜாகைக்கே அது வந்துவிட்டது. "மாமா! எங்கள் வீட்டுக்கு வருவதாகச் சொன்னீர்களே, எப்போது வருகிறீர்கள்? அம்மா ரொம்பச் சந்தோஷப்பட்டாள். கேட்டுவரச் சொன்னாள்!" என்றது.

அந்தக் குழந்தையின் உள்ளத்தைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. "அதற்கென்ன, சாயங்காலம் வருகிறேன், குழந்தை!" என்றேன். பக்கத்திலே இருந்த இரண்டொருவர் சிரித்ததைக் கேட்டதும் எனக்கு முனைப்பு அதிகமாகிவிட்டது. என் சுபாவந்-