பக்கம்:மயில்விழி மான்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகக்காரி

59

படி கடவுளின் அருள் இருந்தது. தாயின் ஈமக்கடன்களை முடித்துவிட்டுக் குழந்தையை என் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்ச் சேர்ந்தேன்.

முதலில் என் வீட்டைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் அருவருப்புக் காட்டினார்கள். யாரோ வீதியிலே திரிந்த பிச்சைக்காரப் பெண்ணைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டதாக முணுமுணுத்தார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை. சில நாளைக்குள்ளேயே நிலைமை மாறி விடும் என்று அறிந்திருந்தேன். குழந்தை நீலமணி என் குடும்பத்தாரைச் சொக்குப்பொடி போட்டு மயக்குவது போல் மயக்கிவிட்டாள். அவளுடைய குறுகுறுப்பான கண்களும், சுறுசுறுப்பான நடத்தையும், மழலைப் பேச்சும், இனிய பாட்டும் எல்லாரையும் வசீகரித்து விட்டன. "குழந்தையைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லாமலே போய்விட்டது. அதற்குப் பதிலாக நான் நீலமணியை எதற்காவது கண்டிக்கும்படி நேர்ந்தால் என் வீட்டில் எல்லாரும் என் பேரில் பாய ஆரம்பித்து விடுவார்கள். சிறு குழந்தைகளுக்கு அளவுக்கு மீறிச் செல்லம் கொடுப்பது தவறு என்பதை நான் அறிவேன். அப்படி இடங்கொடுத்து கெட்டுப் பாழாய்ப்போன பெரிய மனிதர்கள் வீட்டுக் குழந்தைகள் எத்தனையோ பேரையும் எனக்குத் தெரியும். நீலமணியினுடைய குழந்தை வாழ்க்கையை உத்தேசிக்கும்போது அவளை ரொம்பவும் கண்டித்து வளர்க்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்திருந்தேன். ஆனாலும் ஒன்றும் பயன்படவில்லை. எனக்கே அந்த அநாதைக் குழந்தையைக் கண்டிக்கச் சாதா-