பக்கம்:மயில்விழி மான்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயில்விழி மான்

5

பிரயாணம் செய்தவர்களின் ஜாபிதாவில் மதிவாணன் எம்.ஏ. என்ற பெயர் இருந்திருக்கும். அது தான் என் பெயர். அதற்கு ஆறு மாதத்திற்கு முன்னால் ஒரு முக்கியமான ஆராய்ச்சிக் கோஷ்டியில் சேர்ந்து அமெரிக்காவுக்கு நான் சென்றேன். இந்தியாவிலிருந்து இப்போதெல்லாம் பல நிபுணர் கோஷ்டிகளும் கலைஞர் கோஷ்டிகளும் உலகிலுள்ள பற்பல நாடுகளுக்கும் போய்க் கொண்டிருக்கின்றனர் அல்லவா? அந்தந்த நாடுகளில் பற்பல அபிவிருத்தி மார்க்கங்களைத் தெரிந்து கொண்டு வந்து இந்தியாவில் வளங்கொழிக்கச் செய்வதற்காகத்தான் அவர்கள் போகிறார்கள். நான் போன காரியம் அமெரிக்காவில் டென்னஸி மாகாணத்தில் உள்ள வாத்துப் பண்ணைகளைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்வதற்காக. அங்கேயுள்ள வாத்து ஒவ்வொன்றும் தினம் எட்டு படி பால் கொடுக்கிறதாம்! நம் ஊரில் மட்டும் ஒரு வாத்து அரைப்படி பாலுக்கு மேல் கொடுக்க மறுப்பதேன்? டென்னஸி பண்ணையில் உள்ள வாத்துக்களுக்கு அப்படி என்ன ஆகாரம் கொடுத்துப் போஷிக்கிறார்கள்? அவை பிறக்கும் போது, எடை எவ்வளவு? பால் கறப்பதற்கு முன்னாலும் பின்னாலும் எடை எவ்வளவு? என்னென்ன விடமின் சத்துக்கள் உணவில் சேர்த்துக் கொடுப்பதால் அவை அவ்வளவு பால் கறக்கின்றன? அந்த விடமின்களை நாமும் அமெரிக்காவிலிருந்து வரவழைத்து நம்மூர் வாத்துகளுக்குக் கொடுக்கலாமா? அல்லது வாத்துக்களையே தருவித்து விடலாமா? - இம்மாதிரிப் பிரச்சனைகளை நேரில் ஆராய்ந்து தெரிந்துகொண்டு வருவதற்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மயில்விழி_மான்.pdf/8&oldid=1546519" இலிருந்து மீள்விக்கப்பட்டது