பக்கம்:மயில்விழி மான்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

மயில்விழி மான்

எடுத்தாள் அல்லவா? நாடகத்திலும் அந்த வழக்கம் அவளை விடவில்லை. நாடக மேடையில் நீலமணி பிச்சை கேட்டுப் பாடிக்கொண்டு வந்த போது சபையோர்களில் கண்ணீர் விடாதவர்கள் யாருமில்லை. அவர்களில் பலர் காசுகளையும், கால் ரூபாய் அரை ரூபாய்களையும் மேடையின் மீது எறிவார்கள். நீலமணியைத் தொடர்ந்து வந்த அவளுடைய சின்னஞ்சிறு மகன் (நாடகக் கதையிலே வரும் மகனைத்தான் சொல்கிறேன்) அந்தக் காசுகளைப் பொறுக்கிச் சேர்ப்பான். சிலர் ரூபாய் நோட்டுகளை மேடை மீது எறிவதுண்டு. சில நாளைக்கு இப்படி மேடையில் எறியப் படும் பணமே ஐம்பது அறுபது ரூபாய் ஆகிவிடும்.

பிச்சை எடுக்கும் காட்சிக்குப் பிறகு கதாநாயகி தன் மகனுடன் தன்னந்தனியான காட்டுப் பாதையில் வழி நடந்து போவாள். இருவரும் ஒரு மரத்தடியில் உட்காருவார்கள். நீலமணி களைப்புத் தாங்காமல் மரத்தில் சாய்ந்தபடி தூங்கிவிடுவாள்.

அப்போது ஆகாச மார்க்கத்தில் கந்தர்வன் ஒருவன் தேவ ரதத்தில் ஏறிக்கொண்டு வருவான். அவன் தன் மனைவியுடன் சண்டைப் பிடித்துக் கொண்டு வந்தவன். மரத்தில் சாய்ந்து கிடந்த நீலமணியைப் பார்ப்பான். இவளைக்கொண்டு தன் மனைவிக்கு ஒரு பாடங் கற்பிக்க எண்ணுவான். அதாவது, அவளைக் காட்டிலும் அழகான பெண்கள் பூலோகத்திலே உண்டு என்று நிரூபித்துக் காட்ட விரும்புவான். உடனே பூமியில் இறங்கி நீலமணியின் தூக்கம் கலையாமல் அவளைத் தூக்கிக்கொண்டு கந்தர்வலோகத்தில் அவனுடைய மாளிகையின் பூந்தோட்டத்தில்