பக்கம்:மயில்விழி மான்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகக்காரி

79

கொண்டுபோய்ச் சேர்ப்பான். அங்கே நீலமணிக்கு அவன் உபசாரம் செய்வதைக் கந்தர்வப் பெண் வந்து பார்ப்பாள். கந்தர்வனைக் கோபித்து அவனை அப்பாற் போகச் செய்துவிட்டு நீலமணியிடம் அவளுடைய கதையைக் கேட்பாள். கேட்ட பிறகு அவளிடம் அனுதாபப்பட்டு "நீ இங்கேயே என்னுடன் இருந்துவிடு. உனக்கு ஒரு குறைவுமின்றி நான் பார்த்துக் கொள்கிறேன்" என்பாள்.

நீலமணி கந்தர்வபுரியின் அற்புத அழகு வாய்ந்த பூந்தோட்டங்களில் சித்திர விசித்திரமான பல வர்ண மலர்களையும் அந்த மலர்களைச் சுற்றிச் சுற்றிப் பறந்த பட்டுப் பூச்சிகளையும் பார்த்துக் கொண்டு உலாவி வருவாள். ஆனாலும் அவளுடைய மனத்தில் நிம்மதி ஏற்படாது. பூத்துக் குலுங்கிய மந்தார விருட்சத்தின் அடியில் நின்று ராகமாலிகையில் ஒரு விருத்தம் பாடுவாள். அந்தப் பாடலை நீங்கள் அவசியம் கேட்டிருப்பீர்கள்.

"பெற்ற தாய்தனை மக(வு) மறந்தாலும்
     பிள்ளையைப் பெறுந் தாய் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
     கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
உற்ற தேகம் உயிர் மறந்தாலும்
     உயிரை மேவிய உடல் மறந்தாலும்
நற்றவத்தவர் இதயத்தே ஓங்கும்
     நமச்சிவாயத்தை நான் மறவேனே..."

இதுதான் பாடல், இதன் கடைசி அடியான "நமச்சிவாயத்தை நான் மறவேனே" என்று நீலமணி பாடும்போது உடலும் உள்ளமும் உயிரும் உரு-