பக்கம்:மயில்விழி மான்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

மயில்விழி மான்

வீட்டிலேயே அவர்களுக்கு ஜாகை ஏற்படுத்திக் கொடுத்தேன்.

டாக்டர் ஒரு மாதம் வைத்தியம் பார்த்தபின், "நெருக்கடியான நிலைமை தீர்ந்து விட்டது; இனி மேல் நான் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. நமச்சிவாயத்தை மதனப்பள்ளிக்கு அழைத்துப் போய் அங்கே இரண்டு வருஷம் இருக்கச் செய்ய வேண்டும்" என்று சொன்னார்.

இந்தக் காலத்தில் புண்ணியவான்கள் ஜில்லாவுக்கு ஒரு க்ஷயரோக வைத்தியசாலை ஏற்படுத்தி வருகிறார்கள். அப்போதெல்லாம் மதனப் பள்ளிக்குப் போனால் தான் அந்தக் கொடிய வியாதிக்கு சிகிச்சை என்று இருந்தது.

தனப்பள்ளிக்குப் போய் இரண்டு வருஷம் இருப்பதற்கு ஐயாயிரம் ரூபாய் பணம் வேண்டும். இதற்கு எங்கேபோவது என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கையில் எதிர்பாராத உதவி ஒன்று கிட்டியது. கும்பகோணத்தில் அப்போது வேறொரு நாடகக் கம்பெனியார் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். நமச்சிவாயத்தின் நிலைமையை அறிந்து அவனுக்கு உதவிசெய்யும் முறையில் அவர்கள் ஒரு யோசனை கூறினார்கள். அதாவது, நீலமணி அவர்களுடைய கம்பெனியில் பத்து 'ஸ்பெஷல்' நாடகங்களில் நடித்தால் நாடகத்திற்கு ஐந்நூறு ரூபாய் வீதம் ஐயாயிரம் முன் பணமாகவே தருவதற்கு முன்வந்தார்கள்.