பக்கம்:மருதநில மங்கை.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை101


அணைத்துக் கொண்டாள். அந்நிலையிலும், தன் கண்முன் தந்தையே நிற்பதால், மீண்டும் அவன், “அப்பா! அப்பா!” என்றே அழைக்கத் தொடங்கினான். தான் ஒன்று கேட்க, அவன் ஒன்று கூறும் செயல், அவளுக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை நினைவூட்டிற்று. அதனால் தன்முன் நிற்கும் தோழிபால், “தோழி! நம் நோய் தீர்க்கும் மருந்தாவான் இவன் என்று கருதி நாம் இவனைப் பாராட்ட, இவன் நாம் கேட்டதற்கு விடை தாராது, தனக்குத் தொடர்பல்லாத, நமக்குத் துன்பத்தைத் தரவல்ல எதையோ ஒன்றைக் கூறுகிறான். இவன் செயல், முன்பு ஒரு நாள் நம்மால் வளர்த்து விடப் பெற்ற பாணன், சேய்மைக்கண் வரக்கண்டு அவனை அழைத்து, நாம் ஒன்று வினவ அவன் செய்த தவறு அவன் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருந்தமையால், வாய்மறந்து, ஏனாதிப் பாடி எனும் பரத்தையர் சேரியில் வாழ்கிறோம்!’ எனக் கூறி விரைந்து மறைந்து போன செயலை நினைப்பூட்டி நகை விளைக்கிறதன்றோ?” என்று கூறினாள்.

கணவன் வருகையையும், அவன் வருகை அறிந்தே, மகன், “அப்பா ! அப்பா !” என அழைக்கிறான் என்பதையும், அறிந்து கொள்ளாமையால், அவ்வாறு கூறினவள், பின்னர், மகன் தன் பின்புறமே நோக்கி நிற்பதாலும், தன் முன் நிற்கும் தோழியின் கண்களும், அவ்வப்போது, தன் பின் புறத்தையே நோக்கியதாலும், கணவன் வந்து பின்புறத்தே நிற்கிறான் என்பதை உணர்ந்து கொண்டதும், “தோழி! கணவர் வந்துளார் என்பதை அறிந்து கொண்டேன். ஆனால் அவர் வருகை கோட்டையுள் வாழ்வாரை அழித்தற்கு வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/103&oldid=1129666" இலிருந்து மீள்விக்கப்பட்டது