பக்கம்:மருதநில மங்கை.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை117


எனக் கேட்டுச் சினந்தாள். தாயின் சினங்கண்டு அஞ்சிய சேடி, “தாயே! அதற்குக் காரணம் இதோ நிற்கும் இக்கள்வனே!” என்று மகனைச் சுட்டிக் காட்டிவிட்டு, நடந்ததை நடந்தவாறே உரைத்து, “இவன் அங்கு அத்தனை நேரம் தங்கியதால் காலங் கடந்ததல்லது என்னால் நேர்ந்த தவறு எதுவும் இல்லை!” என்று கூறி உட்சென்றாள்.

சேடி கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தான் அவ் வீட்டின் தலைவன். கணவனை அந்நிலையில் காணவே, அவள் சினம் அளவு கடந்து பெருகிற்று. மகன் தலையில் புதிய மலர் சூட்டியிருப்பதைக் கண்டாள். அது அப் பரத்தை சூட்டிய மலர் என அறிந்து, அதை எடுத்து எறிந்தாள். “மகனே! இனி, இவ்வாறு உனக்கும், உன் தந்தைக்கும் உறவுடையளாய அவள் சூட்டும் மலர் அணிந்து ஈண்டு வாரற்க!” என்று கூறி வருந்தினாள், அந்நிலையில், தம் காதலியர் பண்ணிய புணர்ச்சிக் குறிகள் விளங்கும் மேனியோடு வந்து நிற்கும் காதலனைக் காணவே, அவள் கோபம் கொடிய துயராக மாறிற்று. “மகனே! தன் காதலியின் மனை புகுந்து, அவள் சூட்டிய மாலையோடு வந்து தந்த நோயினும், அவன் தந்தை அக்காதலியைக் கூடிய கோலத்தோடே வந்து நின்று தரும் நோய் பெரிதாம். அது வெந்த புண்ணில் வேல் எறிந்தாற் போல் வருத்துகிறது என்னை!” என வெறுத்துக் கூறி வாயடைத்துக் கிடந்தாள். -

“பெருந்திரு நிலைஇய, வீங்குசோற்று அகன்மனைப்,
பொருந்து நோன்கதவுஒற்றிப், புலம்பி, யாம் உலமர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/119&oldid=1129785" இலிருந்து மீள்விக்கப்பட்டது