பக்கம்:மருதநில மங்கை.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10புலவர் கா. கோவிந்தன்


அவள் மனம், உடனே மாறிவிட்டது. “அன்ப! என்னை மறவாது, எளியாள் மனைவந்து நிற்கும் உன் அன்பிற்கு என் நன்றி! உன் அன்பு மறவாமை அறிந்து மகிழ்கிறது என் உள்ளம்! அன்பு மறவாது இன்று இவண் வந்த உன் செயல் ஒன்றே போதும். அது ஒன்றினாலயே என் உள்ளம் திறைவெய்தி விட்டது. மேலும், இவண் நின்று காலத்தை வீணாக்கிக் கழிக்காதே. விரைந்து சென்று, நின்னை விரும்பி எதிர் நோக்கி நிற்கும் பரத்தையரின் ஆசையை நிறைவேற்றி மகிழ்வாயாக. தேரைப் பூட்டு அவிழ்த்து விடாது, போகத் துடித்து நிற்கின்றான் உன் பாகனும். ஆகவே அன்ப! போய் வருக!” என்று கூறி அவனை உள்ளே அழைத்துச் செல்லாது ஊடி நின்றாள்.

விங்குநீர் அவிழ்நீலம் பகர்பவர் வயல்கொண்ட
ஞாங்கர் மலர்சூழ்தந்து, ஊர்புகுந்த வரிவண்டு,
ஓங்குயர் எழில்யானைக் கனைகடாம் கமழ்நாற்றம்
ஆங்கவை விருந்தாற்றப் பகல்அல்கிக், கங்குலான்

வீங்குஇறை வடுக்கொள விழுநர்ப் புணர்ந்தவர் 5
தேங்கமழ் கதுப்பினுள் அரும்புஅவிழ் நறுமுல்லைப்
பாய்ந்துஊதிப் படர்தீர்ந்து, பண்டு, தாம் மரீஇய
பூம்பொய்கை மறந்து உள்ளாப் புனல்அணி நல்ஊர!

அனைமென்தோள் யாம்வாட, அமர்துணைப் புணர்ந்து,
மணமனையாய் எனவந்த மல்லலின் மாண்புஅன்றோ, 10
பொதுக்கொண்ட கவ்வையின் பூவணிப் பொலிந்தநின்
வதுவைஅம் கமழ்நாற்றம் வைகறைப் பெற்றதை,

கனலும் நோய்த்தலையும், நீ கணங்குழை அவரொடு
புனல்உளாய் எனவந்த பூசலின் பெரிதன்றோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/12&oldid=1129361" இலிருந்து மீள்விக்கப்பட்டது