பக்கம்:மருதநில மங்கை.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19


யானே தவறுடையேன்!

தெருவுதோறும் தேவ கோட்டம் எனக் கூறுமாறு கோயில்கள் மலிந்த ஒரு மாநகரின் செல்வக் குடியில் வாழ்ந்திருந்தாள் ஒரு பெண். பால் மனம் மாறாப் பருவம் வாய்ந்த தன் மகனோடு மகிழ்ந்து வாழ்ந்திருந்தாள். மகனின் மலர்ந்த முகம் கண்டும், அவன் மழலை மொழி கேட்டும் மகிழ்ந்திருந்தாளேனும், தன்னைக் கைவிட்டுக் கணிகையர் பின் திரியும் தன் கணவன் நிலைகுறித்துக் கண்ணwர் உகுத்துக் கலங்கிக் கிடந்தாள். அவள் ஒருநாள் தன் மகனை அழகு செய்து, சேடி ஒருத்திபால் அளித்து, ஊரில் உள்ள கோயில்களுக்கெல்லாம் சென்று வழிபாடாற்றி வருமாறு அனுப்பினாள். குடை விரித்து, அதன் நிழலில் செல்லும் தன் மகனின் தோற்றம், ஒரு இலை ஓங்கி உயர்ந்து நிற்க, அவ்விலையடியில் மலர்ந்திருக்கும் தாமரை மலர் போல் தோன்றக் கண்டு, மகிழ்ந்து, அவன் மறையும் வரை பார்த்திருந்துவிட்டு, உள்ளே சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/122&oldid=1129795" இலிருந்து மீள்விக்கப்பட்டது