பக்கம்:மருதநில மங்கை.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130புலவர் கா. கோவிந்தன்


உண்டிலன். வேண்டுமளவு உண்ணானாயின், விரைவில் பசியால் வருந்துவன் என அறிந்த தாய், அவன் ஆட்டத்தை மறந்து பால் உண்ணும் வகையில் அவன் கருத்தினை ஈர்ப்பாரையும், ஈர்க்கும் நிகழ்ச்சிகளையும் எடுத்துக் கூறியாவது பாலூட்ட வேண்டும் எனக் கருதினாள். மக்கள், தாயின் முகத்தை அடுத்துக் காணக் கூடிய முகம், தந்தை முகமே. தாயை அடுத்துத் தந்தையையும், அவன் செயலையுமே மக்கள் அறிவராதலின், மகனுக்கு அவன் தந்தையை நினைப்பூட்டி, “அத்தந்தைக்காக வேண்டி, ஒரு பங்குப்பால் பருகுக!” எனக் கூற வாயெடுத்தாள்.

அந்நிலையில் அவன் தந்தை ஆங்கு இல்லை. பரத்தை வீடு சென்றிருந்தான். அந்நினைவு எழ வருந்திய அவள், “மகனே! பாடிப் பிழைக்கும் உரிமையால் எவரிடமும் எளிதிற் சென்று பழகும் தன் பாண் தொழிலால், தான் செய்யும் தவறுகளை மறைத்து வாழும் துறையில் வல்லனாய பாணனை, மீனை அகப்படுத்தும் தூண்டில் போல் தூதாக விடுத்துத் தான் விரும்பும் மகளிர் மனத்தைத் தன் வயமாக்கித், திரிவதையே தொழிலாகக் கொண்ட உன் தந்தைக்குரிய கூறு இது. இதை உண்!” எனக் கூறி ஒரு சிறிது ஊட்டினாள்.

கணவன் நினைவை அடுத்து, அவனால் காதலிக்கப்பட்டுச் சிறிது பொழுது அவன்பால் நலம் நுகர்ந்து, பின்னர் அவனால் கைவிடப்பட்ட மகளிர் நினைவும் எழவே, “மகனே! உன் தந்தை, காணும் புதிதில், ‘உன்னைக் கைவிடேன், கலங்கற்க!’ எனக் கூறும் ஆணையை உண்மை என உளம் கொண்டு நம்பி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/132&oldid=1129821" இலிருந்து மீள்விக்கப்பட்டது