பக்கம்:மருதநில மங்கை.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை131


அவனால் தம் நலம் இழந்து, பின்னர் அவன் தன் ஆணை மறந்து கைவிட்டுச் சென்றானாகத், தம் கண்கள், நீலமலர் போன்ற நிறைந்த அழகு அழிய, நீர் ஆறெனப் பெருக அழுது அழுது, உறக்கம் கொள்ளாது உறுதுயர் கொண்டு, உள்ளம் நொந்து கிடக்கும் உன் தாய்மார்களுக்காக ஒரு சிறிது உண் !” என்று கூறி, ஒரு கூறு ஊட்டினாள்.

அந்நிலையில், பரத்தை வீடு சென்ற கணவன், பாணன் முதலாம் தன் தோழர்களோடு ஆங்கு வந்து, அவளறியாவாறு, அவள் பின் நின்றான். ஆனால், அவன் வருகையை அறிந்து கொண்டான் அம்மகன். அதனால், பால் உண்பதை விடுத்துத், தந்தையை நோக்கத் தொடங்கினன். மகன் செயலால், கணவன் வருகையைக் கண்டு கொண்டாள் அவள். கணவன் ஒழுக்கக் கேட்டால் கலங்கியிருக்கும் அவள், அவனை அவன் தோழரோடு ஆங்குக் காணவே கடுங்கோபம் கொண்டாள். அதனால், “என் மகனை நான் பாராட்டிக் கொண்டிருக்கும் ஈங்கு, இந்நிலையில், தன் தோழர்களோடு வந்து நிற்கும் இவனை ‘வருக’ என அழைத்தவர் யாரோ?” என வெறுத்துரைத்தாள். பின்னர் மகனை நோக்கி, “நான் கூறும் பாராட்டுரை கேட்டு மகிழும் மகனே! நான் தரும் என் பங்குப் பாலை முதலில் பருகுக. ஈங்கு வந்து நிற்கும் வீணரை வேடிக்கை பார்ப்பதைப் பிறகு மேற்கொள்!” என்று கூறிப் பாலூட்டத் தொடங்கினாள்.

ஆனால், தந்தையைக் கண்ட மகிழ்ச்சியால், அம்மகன் தாய் ஏது கூறி ஊட்டவும் உண்ணாது மறுத்துவிட்டுத் தந்தையின் முகத்தையே நோக்கி நின்றான். தான் இன்னுரை வழங்கி, இனிய பால் ஊட்டவும், அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/133&oldid=1129822" இலிருந்து மீள்விக்கப்பட்டது