பக்கம்:மருதநில மங்கை.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை143


கின்றேன் நான். ஆதலால் என்னை அணுகி என் கூந்தலைத் தீண்டாதே. என் முன் நிற்கவும் நிற்காது நீங்கி அப்பாற் செல்!” எனக் கூறிக் கடிந்தாள்.

பரத்தையர் சேரி சென்று வாழும் தன் பழியோடு பட்ட வாழ்வை மனைவி அறியாள் என மனப்பால் குடித்தவன் அவன். அதனால் மனைவியின் கோபம் காணத் தொடக்கத்தில் சிறிதே கலங்கினானேனும், தன்பால் தவறு இல்லை என்றே இறுதிவரை உரைத்தல் வேண்டும், அதுவே அவள் உள்ளத்திற்கு ஆறுதலாம் என உணர்ந்த உணர்வால் உள்ள உரம் பெற்றான். அதனால், தன்னை வெறுத்து நோக்கும் அவள் முன் பணிந்தான் போல் நின்று, “பெண்ணே! நீ கூறும் அப்பரத்தையர்பால் நான் எவ்விதத் தொடர்பும் கொண்டிலேன். இது உண்மை. அவ்வாறாகவும், செய்த தவறு எதுவும் இல்லாத என்னைச் சினந்து ஒதுக்குகின்றாய். இது நினக்கு முறையோ?” என்று கூறி இறைஞ்சினான்.

“என்பால் தவறு இல்லை. தவறு இல்லாத என்னை இடித்துரைக்கின்றனை” எனக் கணவன் கூறக் கேட்ட அவளுக்குக் கடுஞ்சினம் பிறந்தது. காலையில் தன் மனையில் இருப்பான்போல் தோன்றுகிறான். நண்பகலில் பரத்தையர் சேரியில் திரிகிறான். பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே மறைந்து, மனம் விரும்பும் மகளிர்பால் சென்று விடுகிறான். அத்தகையான் தன்பால் தவறு இல்லை.எனக் கூறுவதா என எண்ணி வருந்தினாள். வருத்த மிகுதியால், “ஏடா! கண் மூடிக் கண் திறப்பதற்குள் காணாது மறைந்து போகும் இயல்புடையவன் நீ. நீ அத்தகைய இயல்புடையவன் என்பதை அறிந்தும், உன்னைக் காதலித்து, அக்காதற் பயனை முற்றவும் பெற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/145&oldid=1130016" இலிருந்து மீள்விக்கப்பட்டது