பக்கம்:மருதநில மங்கை.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150புலவர் கா. கோவிந்தன்


தன் நிறம் இழந்து, இதழ் உதிர்ந்து பாழான இக் கண்ணியும், உன்னோடு ஊடிய பரத்தையர், சினம் மிகுந்து, தம் மாலைகளை அறுத்து அடித்த அடிபட்டுச் சிவந்த உன் மார்பும், நீ செய்த தவறுகளைக் காட்டப் போதாவோ?” எனக் கூறிக் கடிந்தாள்.

தான் செய்த தவறினைத் தன் மெய் வேறுபாட்டினைக் காட்டி அவள் உறுதி செய்யவே, இனி, அதை மறுத்தற்குக் காரணம் காட்ட முற்படல் மடமையாம் எனக் கருதிய இளைஞன், “ஏடி! நீ கூறிய வேறுபாடு என்கண் இருத்தல் உண்மை. ஆனால் அவ் வேற்றுமைக்கு நீ காட்டும் காரணம் பொருந்தாது. இவ் வேற்றுமைகளைக் கொண்டு, என்னைக் குற்றம் உடையவனாகக் கொள்ளாதே. என்பால் குற்றம் இல்லை. நான் பிழையேதும் புரிந்திலேன் என்பதை ஆணையிட்டு மெய்ப்பிக்கவும் நான் அஞ்சேன்!” எனக் கூறித், தனக்குத் துணையாகப் பொய்ச்சூளை நாடினான்.

“கணவன் பரத்தையர் உறவு கொண்டது உண்மை. அவன் அப் பரத்தையர் மனையினின்றும் தேர் ஏறி வரும் விரைவில், அவள் மாலையைத்தான் அணிந்து வந்துளான். அதனால் தனக்கு வரும் இழிவையும் கருத்தில் கொண்டிலன். இவன் நிலை இவ்வாறாகவும், இவன் தவறினைக் கண்டு நான் கடியின், இவன் சூள் உரைக்கத் துணிகிறான். ஆனால் இவன் உரைக்கப் புகுவது பொய்ச் சூள் என்பதை நான் அறிவேன். பொய்ச்சூள் உரைப்பாரைத் தெய்வம் ஒறுக்கும். நான் சினக்க, இவன் பொய்ச்சூள் உரைக்கின், இவன் தெய்வத்தால் கேடுறுவன். இவன் கெட்டால் நான் மட்டும் வாழ்வனோ? வாழேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/152&oldid=1130024" இலிருந்து மீள்விக்கப்பட்டது