பக்கம்:மருதநில மங்கை.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154புலவர் கா. கோவிந்தன்


வெறுப்புற்றுக் கிடந்த அவள், அவன் இப்போது வந்து தன் கூந்தலைத் தடவிக் கொடுப்பதை கண்டு, “இவன் யார்? என் கூந்தலைத் தொட இவனுக்கு என்ன உரிமை? என்னைப் பிரியாது, என்பால் பேரன்பு காட்டி வாழக் கடமைப் பட்டவன் இவன். இவன் அக் கடமையில் தவறிவிட்டான். கடமையில் தவறிய இவன், அதை மறந்து, கடமை யுணர்ச்சி யுடையான் போல் வந்து அன்பு காட்டுகிறான். இவன் செயல், தன் ஆட்சிக் கீழ் வாழும் மக்களை, அவர்க்கு வேண்டுவன அளித்துக் காக்க வேண்டிய கடமையில் தவறிய ஒருவன், தன்னை அக் குடி மக்கட்குக் கோன் எனக் கூறிக் கொள்வது போலும் கொடுமை யுடைத்து!” என்று கூறிப், பின்னர் அவனை நேர்முகமாக நோக்கி, “ஏடா! நீ என் வீட்டிற்கு வாராதே. வந்த வழியைப் பார்த்து நீ சென்ற இடத்திற்கே சென்று சேர்வாயாக!” என்று கூறி வழிமறித்தாள்.

இளைஞன், மனைவி வழிமறித்து நிற்பதைக் கண்டு, சிறிதும் மனம் கலங்காதே அவளைப் பார்த்துப், “பெண்ணே ! நீயும் நானும் ஒருயிரும் ஈருடலுமாய் இயைந்து வாழக் கடமைப்பட்டவராவோம். அத்தகைய நாம், ஒருவரோ டொருவர் ஊடி நிற்பது முறையோ? பெண்ணே! எட்டுக் கால்களும், இரண்டு தலைகளும் கொண்ட சிம்புள் எனும் பறவை யொன்று இருப்பதாகச் சிலர் கூறுவதை நீயும் அறிவாய். அப் பறவையின் ஒரு தலை மற்றொரு தலையோடு போரிடுவதுண்டோ? என்னோடு ஊடிப் புலந்து நிற்கும் உன் செயல், அப் பறவையின் தலைகள் ஒன்றோடொன்று போரிடுவது போலப் பொருத்தமற்றதாம். என்னை வெறுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/156&oldid=1130028" இலிருந்து மீள்விக்கப்பட்டது