பக்கம்:மருதநில மங்கை.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை161


நம்பி யிருப்பவனாதலின், அவள் சினத்திற்காம் காரணத்தை அறியாது கலங்கினான். அதனால் சினக்கும் அவள் முன் சென்று, “பெண்ணே ! நீ இவ்வாறு சினந்து வெறுக்க, என்பால் நீ கண்ட தவறு யாது?” என்று கேட்டான்.

“என்பால் நீ கண்ட தவறு யாது?” என்று கேட்ட கணவனை விழித்து நோக்கியவாறே, “ஏடா! நேற்று இரவு, மழையையும் கருதாது, மங்கை ஒருத்தி, தன்னைக் கண்டவர் மனம் மகிழும்வண்ணம் அணி செய்து கொண்டு வந்து, நம் கதவைத் தட்டிய அச்செயல், உன் தவறினைக் காட்டப் போதாவோ? அவள் கதவைத் தட்டிய ஒலிகேட்ட நீ, விரைந்தோடிச் சென்று கதவைத் திறந்தது உன் தவறினைக் காட்டப் போதாவோ? வந்தவள் சினம் மிகக் கொண்டு, உன் மாலையைப்பற்றி ஈர்த்துப் பாழ்செய்த அந்தச்செயல் உன் தவற்றினைக் காட்டப் போதாவோ சினம்கொண்டு நிற்பாளின் காலில் வீழ்ந்து பணிந்து, ‘பிழை பொறுத்தருள்க!’ என வேண்டிக் கொண்ட உன் செயல், உன் தவறினைக் காட்டப் போதாவோ? ஏடா! இப்போது சொல், நான் உன்னைச் சினப்பது பொருந்தாதோ?” என்று, அன்று இரவு, தன் கண்ணால் கண்ட நிகழ்ச்சிகளை நிரலே எடுத்துக் கூறி அவனைக் கண்டித்தாள்.

மனைவி, தன் களவு வாழ்க்கையைக் கண்டு கொண்டாள் என்பதை அறிந்து இளைஞன் நடுங்கினான். ஆனால், அந் நடுக்கத்தை அவளறியாவாறு மறைத்துக் கொண்டு, “பெண்ணே! நன்கு சிந்தித்துப் பார்த்தால், நான் தவறற்றவன் என்பது தெளிவாம். நீ கூறிய இரவு

மருதம்–11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/163&oldid=1130038" இலிருந்து மீள்விக்கப்பட்டது