பக்கம்:மருதநில மங்கை.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172புலவர் கா. கோவிந்தன்


கனவு நிகழ்ச்சியைக் கட்டுரைச் சுவைபட அவன் கூறத்தொடங்கவே, அவன் கூறும் அக்கனவைக் கேட்கும் ஆர்வ மிகுதியால், அவள் அவன்மீது கொண்ட சினத்தை மறந்து, சிறிதே அன்பு கொண்டாள். அந்நிலையில் கண்ட அவன் தோற்றம், அவள் கண்களுக்குக் குறையாப் பேரின்பம் தரும் பெருமை வாய்ந்ததாகத் தோன்றவே, அத் தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்தாள். கண்டு தனக் குள்ளே மகிழ்ந்ததோடு நில்லாது, அதை அவன் கேட்கப் பாராட்டிய பின்னர், “ஏடா! கனவில் புகுந்த அப்பூஞ் சோலையில் நீ என்னென்ன கண்டாய் ஆங்கு என்னென்ன நிகழ்ந்தது? அதைக் கூறுக!” என விரும்பி வேண்டிக் கொண்டாள்.

கனவு நிகழ்ச்சிகளைக் கேட்கும் ஆர்வம் மிகுதியால், மனைவி தன் தவறினை மறந்து விட்டாள் என மனச் செருக்குற்ற இளைஞன், தன் களவு நிகழ்ச்சிகளையே கனவு நிகழ்ச்சியாகக் கூறத்தொடங்கிப், “பெண்ணே! நான் அங்குக் கண்ட காட்சி அழகை என்னென்பேன்! அகன்ற அழகிய ஆகாயத்தில் பறந்து திரிந்த அழகிய அன்னப் பறவைகள், அந்திக்காலம் வந்ததும், தாம் பிரியாது வாழும் இமயமலைச் சாரலின் ஒருபால் கூட்டமாகத் தங்கியிருக்கும் காட்சிபோல், அழகிய மங்கையர் பலர், தம் ஆயத்தாரோடு கூடி, அப்பரங்குன்றிற்குச் சென்று, அம்மலையின் ஒரு பால், ஆற்று நீர் கொண்டு வந்து குவித்த மணல் மேட்டின் மீது அமர்ந்திருப்பதைக் கண்டேன்!” என்று கூறினான்.

கணவன் கனவு நிகழ்ச்சியைக் கூறுகிறான் எனும் நம்பிக்கையால், அதைக் கேட்க விரும்பிய அவள், அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/174&oldid=1130137" இலிருந்து மீள்விக்கப்பட்டது