பக்கம்:மருதநில மங்கை.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை173


ஆங்கு மங்கையர் கூட்டத்தைக் கண்டேன் எனக் கூறியவுடனே, கணவன், கனவைக் கூறவில்லை ; நினைவில் தான் கண்ட காட்சியையே கூறுகிறான் என்பதை உணர்ந்து கொண்டாள். உணர்ந்தாளாயினும், அவன் மேற்கொண்டு கூறுவனவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வ மிகுதியால் அவனோடு ஊடல் கொண்டிலள். ஆயினும், கூறுவது கனவன்றே, நினைவில் நிகழ்ந்த நிகழ்ச்சியே என்பதைத் தான் அறிந்து கொண்டதை அவனுக்கு அறிவிக்க விரும்பினாள். அதனால், “ஏடா! பறை தன்னை அடித்து முழக்குவோன், மனத்தில் என்ன இசையை எழுப்புகின்றானோ அந்த இசையே தானும் ஒலித்து எழுப்பும். அதை போல், உன் உள்ளம் எதை விரும்பிற்றோ, அதையே கனவிலும் கண்டாய் போலும்!” என்று கூறினாள்.

தான் கூறுவது கனவு நிகழ்ச்சியன்று. தன் நினைவில் நிகழ்ந்த நிகழ்ச்சியே என்பதை மனைவி கண்டு கொண்டாள் என்பதை அறிந்து கொண்ட இளைஞன், மேலும் அவளைப் பேசவிடின், அவள் தன் ஒழுக்கக் கேடினை ஒழுங்காகக் கூறி ஒறுத்து விடுவள் என் அஞ்சினான். அதனால் அவளைப் பேசவிடாது வாயடைத்துத் தான் கூறக் கருதியன அனைத்தையும் விரைந்து கூறி, அவளைச் சினம் அடங்கப் பண்ணுதல் வேண்டும் எனத் துணிந்தான். அதனால், “ஏடி! இடையிடையே எதையும் கூறாதே, நான் கூறுவனவற்றை மட்டும் கேள். நான் கூறுவனவற்றை, இடையே புகுந்து நீ விரைவில் முடித்து விடாதே!” என்று கூறி, வெகுள்வான் போல் நடித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/175&oldid=1130138" இலிருந்து மீள்விக்கப்பட்டது