பக்கம்:மருதநில மங்கை.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174புலவர் கா. கோவிந்தன்


கணவன் கோபம் கண்ட அவள், “நன்று நன்று! உனக்குக் கோபம் வருகிறது. நான் இடையே எதையும் கூறவில்லை. நீ மேற்கொண்டு சொல்!” எனக்கூறி வாயடைத்து அமைதியாக இருந்து கேட்டாள். அவன் தொடர்ந்தான். “மலர்க்கொடி போன்ற அம் மங்கையர் மணல் மேட்டை விட்டு எழுந்தனர். சோலையுள் புகுந்து ஆங்குள்ளதொரு பூங்கொடியை அனைவரும் ஒருங்கே பற்றி, அக்கொடியில் உள்ள மலர்களைப் பறிக்கத் தொடங்கினர். மகளிர், மலர்களைப் பறிக்கத் தொடங்கினமையால், அம் மலர்களில் அமர்ந்து தேனைக் குடித்து அக மகிழ்ந்திருந்த வண்டுகள், அம்மகளிர்க்கு அஞ்சி, அம்மலர்க்கொடியை விடுத்துப் பறந்து ஓடின. பெண்ணே ! அஞ்சிய வண்டுகள் ஓடிய காட்சி எவ்வாறு இருந்தது தெரியுமா? வேப்பம் பூமாலை அணிந்த நம் வழுதி வரக்கண்ட பகைவர் படை பயந்தோடும் காட்சி போல் இருந்தது அக் காட்சி. நிற்க, மேலே கேள். பெண்ணே! மகளிர் திடுமெனப் புகுந்து பறிக்கவே, அவ்வண்டுகள், அம்மகளிர்க்கு அஞ்சிப் பறந்தோடினவேனும், பின்னர்ப் பறந்தோடிய வண்டுகள் பலவும் ஒன்று கூடிவந்து, அம் மகளிரை மொய்த்துத் துன்புறுத்தத் தொடங்கின.

“வண்டுகள் ஒன்றுகூடி வந்து வருத்தத் தொடங்கவே, அம்மகளிர் அஞ்சினர். அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி ஒளிந்தனர். அவ்வாறு மூலைக்கு ஒருவராய் ஓடவே, ஒருத்தி அணிந்த மலர் மாலையும் முத்து மாலையும், வேறொருத்தியின் தொடியில் மாட்டிக் கொண்டு, இருவரையும் மடக்கின. ஆராய்ந்த அழகிய முத்துகளை, வைத்துப் பண்ணிய ஒருத்தியின் நெற்றித் திலகத்தில் வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/176&oldid=1130139" இலிருந்து மீள்விக்கப்பட்டது