பக்கம்:மருதநில மங்கை.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16புலவர் கா. கோவிந்தன்


அவனொடு பேசேன். அவனைக் காண்பது செய்யேன். அவனொடு புலப்பேன். அவனொடு ஊடுவேன்!’ என்றெல்லாம் உறுதி பூண்டு வாழ்ந்தாள்.

சின்னாள் கழித்து, ஒரு நாள், அரசன் அரண்மனைக்கு வந்தான். அவனைக் கண்டாள் அரசமாதேவி. கண்டவுடனே அவன்பால் கொண்ட சினம் அகன்றது. அவள் நெஞ்சு, அவன் அன்பிற்கு அடிமையாகி விட்டது. வாயிற்கண் சென்று வரவேற்றாள். உள்ளழைத்துச் சென்று உணவளித்து மகிழ்ந்தாள். இரவு கழிந்தது. காலையில் அவளைக் கண்டாள் அவள் தோழி. அரசன் பரத்தை யொழுக்கத்தையும், அரசியாரின் ஊடல் உணர்வையும் அவள் அறிவாள். அதனால் அரண்மனை புகும் அரசனைத் தேவி ஏற்றுக் கொள்ளாள், அவள் ஊடலைத் தணிக்க மாட்டாது, வாயிற்கண் கிடந்து வருந்துவன் வேந்தன் என எதிர் நோக்கியிருந்தாள் அவள். ஆனால், அன்றிரவு அத்தகைய நிகழ்ச்சி எதுவும் நிகழாமை அவளுக்கு வியப்பளித்தது. விடிந்ததும் அரசியை அடுத்துத், “தேவி! நேற்றுவரை நீ கொண்டிருந்த சினமும் உறுதிப் பாடும் இப்போது யாண்டு உளது? ‘புலப்பேன், ஊடுவேன்’ என உரைத்த உரையெல்லாம் என்னாயின? சிறுபூசலும் தலைகாட்டவில்லையே! எவ்வாறு தீர்ந்தது நின் ஊடல்? இதுவோ நின் உறுதி?” என்றெல்லாம் கேட்டு எள்ளி நகைத்தாள்.

அது கேட்ட அரசி, “தோழி! யான் என் செய்வேன்? என் நெஞ்சு என்னை ஏமாற்றி விட்டது. செய்யத் தகும் நற்செயல் இது என்பதை அறியும் அறிவற்றது அது. தனக்கென ஓர்’ ஒழுக்க நெறி உணராதது அது. தனித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/18&oldid=1129375" இலிருந்து மீள்விக்கப்பட்டது