பக்கம்:மருதநில மங்கை.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194புலவர் கா. கோவிந்தன்


பொருட்படுத்தாது, என்னை விட்டு அப்பாற் செல்லும் அவள், தளர் நடையிட்டு அசைந்து அசைந்து செல்லும் அவ்வழகைப் பார்!” என்று அவள் கேட்டு மகிழுமாறு, சில கூறிக் கொண்டே, அவளைப் பின் தொடர்ந்தாள்.

குறளன் கூறியன கேட்டாள் கூனி. அவள் சினமும் சிறிதே தணிந்தது. ஆயினும், அவன், தன்னை எள்ளி நகையாடிக் கூறிய சொற்கள், அவள் உள்ளத்தை அரித்துக் கொண்டேயிருந்தன. திரும்பி அவனை நோக்கினாள். அவன் நடையழகைக் கண்டு மகிழ்ந்தாள். மகிழ்ந்ததோடு நில்லாது, நெஞ்சொடு கூறுவாள்போல், ‘நெஞ்சே! நிலத்தில் ஊர்ந்து செல்லும் யாமையை எடுத்து நேரே நிறுத்தினாற் போன்ற தோற்றம் வாய்க்கப் பெற்ற இவன், குறுகிய தன் இரு கைகளையும் தன் விலாவிற்குள்ளே வீசியவாறே, ‘நான் உன்னை விரும்பேன்!’ என்று கூறி விலக்கவும், விடாது, நம்பின் வருவதைப் பார். காமன் நடந்து வருவது போலும் இவன் நடை அழகையும் காண்!” எனக் கூறி நகையாடினாள்.

குறளன் கூனிமீது கொண்ட காதல் மிகுதியால், அவள் யாமையை எடுத்து நிறுத்தியது போன்ற வடிவம் எனத் தன் வடிவையும், காமன் நடையெனத் தன் நடையையும் பழிக்கவும், அதைப் பொருட்படுத்தாதே, “பெண்ணே ! நாம் ஒருவரை யொருவர் காதலிப்பதற்குக் காரணமாய மலர்க்கணையேந்தி நிற்கும் மாரன் நடையை நீ கண்டதில்லையே. இதுகாறும் கண்டிலையேல், இப்போது காண்!” எனக் கூறிக் கொண்டே, தன் இரு கைகளையும் வீசி நடந்து அவளுக்கு மகிழ்ச்சி ஊட்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/196&oldid=1130167" இலிருந்து மீள்விக்கப்பட்டது