பக்கம்:மருதநில மங்கை.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208புலவர் கா. கோவிந்தன்


கிழிய நலங்கியிருந்தன. அவன் மார்பிற் பூசிய சந்தனச் சாந்து கரைந்து கலையுமாறு வேர்வை வழிய வழிய வந்திருந்தான். அவன் தலைமாலை, தோளிலே வீழ்ந்து, தன் நிறம் கெட்டுக் கசங்கிக் கிடந்தது. இக்காட்சிகளைக் கண்டாள். கணவன் எங்கோ சென்று இவ்வாறு தன் நிலை குலையுமாறு யாதோ ஒரு பெருஞ்செயல் புரிந்து வருகிறான் என எண்ணினாள். அவன் செய்த செயல் எவ்வளவு சிறந்ததேயாயினும், அவன் தன்னைத் தனியே விடுத்து, இத்தனை நாளும் பிரிந்திருந்த வருத்தம் அவளை வாட்டியதால், அவள் அவனை நோக்கி, “ஐய! இத்தனை நாட்களாக நீ எங்கே போயிருந்தாய் அங்கே நீ இவ்வாறு நிலை குலையுமாறு, நீ பண்ணிய பெருஞ்செயல் யாது? இப்பொழுது, இங்கு எங்கே வந்தாய்?” என வினவிச் சினந்தாள்.

பரத்தையர் தொடர்பால் தன் மெய் பெற்ற வேறுபாடுகளை, அவள் சிறிதும் பிழையின்றிக் கண்டு கொண்டது, அவனை நடுங்கச் செய்தது. அதை அவள் அறிந்து கொள்ள அவளுக்குத் துணை புரிந்த அவள் கண்களைக் கண்டு அஞ்சினான். அவை, தம் நுண்ணுணர்வால், எதையும் ஊன்றி நோக்கும் நோக்கால், தன்பால் உள்ள பிற குறைகளையும் கண்டு விடுமோ எனக் கலங்கினான். அதனால் அவற்றை அவற்றின் தொழிலை மறக்கச் செய்யும் கருத்தோடு, “இரு நீல மலர்களை எதிர் எதிராக ஏந்திப் பிடித்துப் பிணைத்து வைத்தாற்போல் பேரழகு காட்டும் அழகிய கண்களே! அத்தகைய கண்களைப் பெற்ற அழகிய நல்லாளே!” என அவற்றையும், அவளையும் பாராட்டினான். தன் பாராட்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/210&oldid=1130220" இலிருந்து மீள்விக்கப்பட்டது