பக்கம்:மருதநில மங்கை.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை217


"யானை ஒன்று கிடைத்தது. அதைக் கண்டு நின்றதால் காலம் கடந்துவிட்டது!” என்று கணவன் கூறக் கேட்ட அவள், “அன்ப! உன் வலையுள் வீழ்ந்த அந்த வேழம், நெற்றியில் அணிந்த திலகமாகிய பட்டத்தினையும், தொய்யில் வரைந்து வனப்புற்றுத் தோன்றும் கொங்கைகளாகிய கோடுகளையும், தொய்யகம் என்ற பெயருடைய தலையணியாகிய அங்குசத்தையும், காதில் கிடந்து தொங்கும் மகரக் குழைகளாகிய மணிகளையும், திருமகள் உருவம் பொறித்த தலைக்கோலமாகிய கழுத்து மெத்தையினையும் கொண்டு, அவ்வகையால் அது வனப்பு வாய்ந்து தோன்றும் எனக் கூறக் கேட்டுளேன். அந்த யானை, நல்ல மணம் வீசும் சுண்ணப் பொடியாகிய நீறு பூசி, நறுமணம் நாறும் நல்ல மதுவாகிய நீர் குடித்து, மனை வாயிலை அடைந்து, கதவாகிய கட்டுத்தறியைச் சார்ந்து, அக் கதவோடு, சங்கிலியால் சேரப் பிணித்தாற் போல், தழுவி நின்று, தெரு வழியே போவோர் எவரும், தன் அழகைக் கண்டு, ஆசை கொண்டு, மயங்கி அறிவிழக்குமாறு தன் அழகைக் காட்டி, அவர் அப்பால் செல்லாவாறு அவர் கால்களைத் தடுத்து வீழ்க்கும் எனவும், கண்டார்க்குத் துயர் விளைக்கும் பேரழகு வாய்ந்த மெல்லிய தோளாகிய பெரிய கையால், தன்னைக் காண்பார்பால் உள்ள நல்ல பண்புகளை யெல்லாம் கவளம் கவளமாக உண்டு பாழாக்கும் எனவும் கூறக் கேட்டுளேன். அன்ப! அத்தகைய வேழத்தை, இன்றுதான் கண்டதுபோல் கூறி, ஏன் பொய்யன் ஆகின்றாய்? அன்ப! அவ்வேழத்தின் தொடியணிந்த தோளாகிய மருமத்தைத் தழுவிப், பின்னர் அதன் மீது தத்தி ஏறி உலாவரும் வழக்கம் உடையவன் நீ உன்பால் காதல் கொண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/219&oldid=1130243" இலிருந்து மீள்விக்கப்பட்டது