பக்கம்:மருதநில மங்கை.pdf/234

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232புலவர் கா. கோவிந்தன்


அவரை அவ்வாறு நின்று காப்பன் எங்கள் அரசன் !’ என உரைப்பதுபோல் ஒலிக்கிறது உன் முரசு. அம்முரசொலி கேட்கும் மக்களும், ‘இம்முரசொலி முழங்கும் நாடு, நமக்கு நல்ல புகலிடமாம்!’ என எண்ணி, உன்னை வந்து அடைகின்றனர். இவ்வாறு உலகமெல்லாம் உன் முரசொலி கேட்டு, அதைத் தம்மைக் காக்கும் காவல் முரசு எனக் கொண்டு கவலையற்று வாழ, இவள் ஒருத்திக்கு மட்டும், அது காவலாய் அமையாது கழிந்ததோ ? அம்முரசொலியைத் தன்னைக் காக்கும் ஒலியாகக் கருத, இவள் தவறி விட்டனளோ? இவள் அவ்வாறு தவறி விட்டவளல்லள். இவளுக்குக் காவலாய் அமையும் கடப்பாட்டில், உன் முரசு தவறியதாக நான் கருதவில்லை. உன் முரசொலி, உலகோர் அனைவர்க்கும், துயர் ஒழித்து உய்விக்கும் உறுதுணையாக, இவள் ஒருத்தி மட்டும் அதன் ஒலி கேட்டு வருந்தித், தன் தோள்கள் வனப்பிழக்க வாடிக் கிடத்தலை நீ கண்டிலையோ? இதுகாறும் கண்டிலையாயின், இனியேனும் கண்டு, இவள் துயர் ஒழிப்பாயாக!

“ஐய! கண் நெடுந்தொலைவில் உள்ள பொருள்களையும் காண வல்லதே. எனினும், அது, தான் உற்ற வடுவைப் பிறர் எடுத்துக் காட்டிய விடத்தும் காண அறியாது. அதுபோல், உலகில் வாழ்வார் அனைவர் துயரையும் அறிந்து போக்கும் ஆற்றல் வாய்ந்த நீ, உன் மனைவியாய், உன்னிற் பாதியாய் வாழ்வாள் துயரை மட்டும் அறிந்திலை. அவள் தோள்வளை கழன்று ஓடுமாறு தளர்ந்து கலங்கவும், அக்கொடுமையை நீ கண்டிலை நின் செயல் எனக்குப் பெரிதும் வியப்பாகிறது. ஐய! அரசர்கள் காணக் கூடாதன, அறியக் கூடாதன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/234&oldid=1130259" இலிருந்து மீள்விக்கப்பட்டது