பக்கம்:மருதநில மங்கை.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28புலவர் கா. கோவிந்தன்


மகளிரைத் தம் வாழ்க்கைத் துணையாக வரைந்து கொள்ளும் அக்குல ஆடவர், அம்மகளிர் கையைப் பற்றிக்கொண்டு, அந்தணர் ஓம்பும் செந்தழலை வலம் வந்து, மணங் கொண்டு வாழும் மண வாழ்க்கையினை-மாண்புமிக்க அந்நகரின் நல்வாழ்வை நன்கெடுத்துக் காட்டும்.

அவ்வளமார் நகரில், இளங்காதலர் இருவர் வாழ்ந்திருந்தனர். அவர்கள் இல்லற வாழ்க்கை இனிதே நடைபெற்று வந்தது. அந்நிலையில் ஒருநாள், தெருவழியே தேர் ஏறிச் சென்ற அவன் எதிரில், எழில்மிக்க ஓர் இளம் பரத்தை, காலில் சிலம்பொலிக்கச் செம்மாந்து வரக்கண்டான். அவள் அழகு அவன் உள்ளத்தை அலைக்கழித்து விட்டது. அவன் அறிவு திரிந்தது. அவள் அவன் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டாள். அவளை எப்படியாவது அடைதல் வேண்டும்; எதைக் கூறியாவது அவள் அன்பைப் பெறுதல் வேண்டும் எனத் துடிதுடித்தது அவன் உள்ளம். ஆனால், அவள் இன்னள், இன்ன இடத்தள் என்பதை அறியாது கலங்கினான். அவளைத் தேடிக் கொணருமாறு தேர்ப்பாகனை விடுத்து, அவள் வரவிற்காக ஒரு மலர்ச்சோலையில் காத்துக் கிடந்தான். சென்ற தேர்ப்பாகன் அவளைத் தேடிப்பிடித்து, இளைஞன் இயல்பும் தகுதியும் எடுத்துக்கூறி, அழைத்துச் சென்று, பூஞ்சோலையில் அவள் வருகையை எதிர்நோக்கியிருந்த இளைஞன்பால் கொண்டுபோய் விடுத்தான். இளைஞனை அடைந்த அவள், ஆடியும் பாடியும் அவனை மகிழ்வித்தாள். இளைஞன் அவளோடு கூடிப் பூக்கொய்தும், புதுப்புனல் ஆடியும் இன்புற்றுக் கிடந்தான்.

காலையில் தேர் ஏறிச் சென்ற கணவன், நெடிது கழியவும் வாராமை கண்டு வருந்தினாள் அவன் மனைவி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/30&oldid=1129434" இலிருந்து மீள்விக்கப்பட்டது