பக்கம்:மருதநில மங்கை.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை29


அவள் கலங்கிய நிலை கண்டு தோழியரும் வருந்தினர். அவருட் சிலர் இளைஞனைத் தேடிச் சென்றனர். மலர்ச் சோலையில் மகிழ்ந்திருக்கும் அவன் நிலையறிந்து வந்து அவளுக்கு அறிவித்தனர். கணவனைக் காணாது கலங்கியிருப்பாளைக் கணவன் பரத்தையர் தொடர்பு கொண்ட பழியுடையனாயினன் என்ற செய்தி பெரிதும் வருத்திற்று. அப்பரத்தை உறவால் தன் இன்ப வாழ்க்கைக்கு இடுக்கண் நேர்ந்து விட்டதே என எண்ணிக் கலங்கினாள். அவ்வாறு கலங்கியிருப்பாள் முன்வந்து நின்றான் இளைஞன்.

ஒழுக்கம் கெட்டு ஊர் திரிந்து வரும் கணவனைக் காணவும் நாணின அவள் கண்கள். அதனால், வந்தவனை ‘வருக’ என வரவேற்காது, வாயடைத்து வருந்திக் கிடந்தாள். மனைவி நம் ஒழுக்கக் கேட்டினை உணர்ந்து கொண்டாள், நம்பால் அவ்வொழுக்கக் கேடு இல்லை என உணர்ந்தாலன்றி, நம்மை ஏற்றுக் கொள்ளாள் என உணர்ந்தான் இளைஞன். அதனால், மனைவியின் அருகில் சென்று, பணிந்து நின்று, “மாண்புடையாய்! இன்று நான் ஒரு பரத்தையைக் கண்டது உண்மை. ஆனால், என் உள்ளத்தை அவள்பால் பறிகொடுப்பதன் முன்னர் அவள் இயல்பினை அறிந்து கொண்டேனாதலின், அப்பழி பெறாது மீண்டேன். இது உண்மை. அவள் ஒரு பெண்ணேயாயினும், அவள்பால் அப் பெண்மைக்குரிய இயல்பு சிறிதும் காணப்படவில்லை. ஒருத்தி ஒருவனோடே வாழ வேண்டும் எனும் வரையறையுள்ளம் அவள்பால் இல்லை. பெண்களுக்குப் பேரணிகலனாய்ப் பெருமை தரும் நிறை எனும் குணம், அவள்பால் நில்லாது நீங்கி விட்டது. மேலும், அவள் தனக்கென ஓர் உள்ளம் பெற்று, அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/31&oldid=1129436" இலிருந்து மீள்விக்கப்பட்டது