பக்கம்:மருதநில மங்கை.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36புலவர் கா. கோவிந்தன்


கண்கள் அணையிற் படிந்து சிறிதே உறக்கம் கொள்ளும். ஆனால், அந் நிலையில், கணவன், புதியாளொரு பரத்தையை, அவளுக்கு உறவாய பரத்தையர் சூழ்ந்து நின்று பாராட்ட மனங்கொள்ள, அம்மண விழாக்குறித்து எழும் முரசொலி, அவள் காதுகளுள் வந்து பாய்ந்து, அவ்வுறக்கத்தைப் போக்கி விடும். கணவனை நினைந்து நினைந்து, ஓயாது அழுது, உறக்கம் மறந்த அவள் கண்கள், ஒரோவொருகால், அவள் மகன், அழுதுகொண்டிருப்பாள் முன்வந்து அணைத்துக் கொள்ள, அம் மகனைப் பற்றிய நினைவு மகிழ்ச்சி, கணவன் ஒழுக்கக் கேட்டினை ஒருவாறு மறக்கச் செய்ய, சிறிதே இமை மூடி உறக்கம் கொள்ளும். ஆனால், அந்நிலையில், அவள் கணவன், தாம் விரும்பும் பரத்தையர் பலரையும் ஒன்றுகூட்டி அழைத்துச் சென்று, ஊர் மன்றத்தே கூடியிருந்து, அவரோடு துணங்கைக் கூத்தாட, அவ் ஆட்டத்தின் இடையிடையே அவர் எழுப்பும் ஆரவாரப் பேரொலி, அவ்வுறக்கத்தைக் கலைத்துவிடும். இரவும், பகலும் கணவன் கொடுமையே கருத்தில் நிற்பதால், கண்கள் எக் காலமும் நீர் நிறைந்து வழியும். நீர் நிறைந்த கண்ணின் இமைகள், எக்காலமும் திறந்தே கிடத்தல் இயலாது. அதனால், அவள் இமைகள் சிறிதே மூடி உறக்கம் கொள்ளுமாயினும், அக்காலை, அவள் கணவன் அவன் விரும்பும் பரத்தையரை, அப் பரத்தையர் சேரியினின்றும் ஏற்றிக் கொணரும் தேர்க் குதிரைகளின் கழுத்து மணியினின்றும் எழும் ஒலி, தெளிவாக ஒலித்து, அவ்வுறக்கத்தை ஒழித்துவிடும்.

இந் நிகழ்ச்சிகளால், அவள் பெரிதும் கலங்கினாள். அவள் நிலை பெரிதும் கவலைக்கிடமாயிற்று. ஆற்றல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/38&oldid=1129455" இலிருந்து மீள்விக்கப்பட்டது