பக்கம்:மருதநில மங்கை.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42புலவர் கா. கோவிந்தன்


வரலாம் எனக் கருதிப் புறநகரை அடைந்தாள். அவள் சென்ற காலம் விடியற்காலம். இளஞாயிறு மெல்ல மெல்லத் தன் கதிர்களைப் பரப்பிக் கொண்டிருந்தான். ஒரு பொய்கையை அடைந்தாள். தாமரை அரும்புகள் மலரத் தொடங்கின. ஒரு வண்டு மலரும் அரும்புகளைத் தேடிச் சென்று அவற்றில் உள்ள தேனைக் குடித்து மகிழ்ந்தும், மேலும் அத் தேன் குடிக்கும் ஆசையால், அப் பொய்கையை விட்டு அகலாது, அப் பொய்கையிலேயே சுற்றிச் சுற்றி வந்தது. இந்தக் காட்சியை அவள் கண்கள் கண்டன. ஆனால், கணவனையே எண்ணிக் கொண்டிருக்கும் அவள் மனத்திற்கு அக் காட்சி புலப்பட்டிலது. அதற்கு மாறாக, அப் பொய்கை பரத்தையர் சேரியாகவும், மலரும் புதுமலர்கள் பருவம் பெற்ற இளம் பரத்தையராகவும், அம் மலர்களைச் சுற்றித் திரிந்து, அவற்றின் தேன் உண்டு மகிழும் வண்டு, அவ்விளம் பரத்தையர் பின் சென்று, அவர் மனம் மகிழுமாறு பலப் பல கூறி, அவரை அடைந்து, அவர்பால் நலம் நுகர்ந்து கிடக்கும் கணவனாகவும், தேன் குடித்த பின்னரும், அவ்வண்டு, பொய்கையை விட்டுப் போக மனம் இன்றி, ஆங்கேயே சுற்றிச் சுற்றி வருதல், இளம் பரத்தையர் சிலரோடு இன்பம் நுகர்ந்த தன் கணவன், மேலும் அம் மகளிர்பால் இன்பம் துகரும் ஆசையால், அச்சேரியை விட்டு வர மனமின்றிக் கிடப்பதாகவும் தோன்றவே, பெரிதும் வருந்தினாள்.

அந் நிலையில், அதுகாறும் இலைகளால் மறைப்புண்டு, அவள் கண்ணிற்குப் புலப்படாதிருந்த ஒரு பெரிய தாமரை மலர், தன்னை மறைத்திருந்த இலைகள் அகலவே, அவள் கண்ணிற்குப்பட்டது. ஞாயிற்றின் ஒளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/44&oldid=1129470" இலிருந்து மீள்விக்கப்பட்டது