பக்கம்:மருதநில மங்கை.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44புலவர் கா. கோவிந்தன்


"அன்ப! ஒழுக்கத்தின் உறைவிடம் நீ, மனைவியை யன்றிப் பிறர் மனை புகுந்தறியாக் குணக் குன்று நீ என்றெல்லாம் உன்னைப் புகழ்ந்தனர் - உன் பாகனும், பாணனும், தோழனும். அவர்கள் இப்பொழுது எங்கே? அவர்கள் இந்நிலையில் ஈண்டு வரட்டும். வந்து உன்னைக் காணட்டும். பரத்தையர் பண்ணிய இப்புண்களை, அவர் தொடி அழுத்திச் செய்த இத் தழும்பைக் காணட்டும். அவள் கூந்தல் மணம் உன் மார்பில் வீசுவதை நுகரட்டும். பின்னர் கூறட்டும், நீ எத்துணைத் துரயோன் என்பதை!” என்று கூறிச் சினந்தாள்.

பின்னர்ச் சிறிதே அமைதியுற்று, “அன்ப! அன்பு குறையாது, நீ செய்யும் தலையளியால் உன்னைப் புணரும் பேறு பெற்ற அப் பரத்தையரைப் பழிப்பவர் ஈங்கு ஒருவரும் இல்லை. வெளி வந்த கதிர்கள், பாலேறி முற்றப் பெருமழையை எதிர்நோக்கி வாடும் பயிருக்கு மேகம், அது வேண்டும் பெருமழை தராது, சிறு தூரலை அளிப்பது போல், உன் அன்பை ஆரப் பெற்று உயிர்வாழ விரும்பும் என்பால், ஓர் ஆண்டிற்கு ஒரு நாள் என வந்து, சிறிது பொழுதே தங்கிச் சிறிது இன்பம் அளித்துச் செல்வதை யான் வேண்டேன். அதனால், நான் பெருந்துயர் கொள்கிறேன். ஆகவே, அன்ப! இதுகாரும் உன் வருகையை எதிர்நோக்கி, ‘இன்று வருவர், நாளை நில்லார்!’ என எண்ணி எண்ணி அமைதியுற்று வாழ்ந்தது போலவே, இனியும் வாழ வல்லேன். உன்னை இமைப் பொழுதும் பிரியாது பேரின்பம் நுகரும் அப்பரத்தையர் வருந்தாவாறே, அவர் மனைக்கே செல்க!” சினந்துகூறி அவ்விடம் விட்டு அப்பாற் சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/46&oldid=1129473" இலிருந்து மீள்விக்கப்பட்டது