பக்கம்:மருதநில மங்கை.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9


நெஞ்சமும் ஏமுற்றாய்

ணவன் பரத்தையர் தொடர்பு கொண்டு வாழ்ந்தான். மனைவியை மறந்து பரத்தையர் சேரி சென்று வாழும் அவன், அங்கும் தன் உள்ளம் விரும்பும் ஒருத்தியைத் தேர்ந்து, அவள் ஒருத்தியோடு மட்டும் உறவு கொண்டு வாழ்ந்தானல்லன். காலையில் ஒருத்தி, நண்பகலில் வேறு ஒருத்தி, மாலையில் மற்றொருத்தி என வேளைக்கு ஒருத்தியாக உறவு கொண்டு வாழ்ந்தான். இன்று தன்பால் உறவு கொண்டு, தன் மனையில் வாழும் அவன், நாளை தன்னைக் கைவிடுவன், தன் மனையையும் மறந்து விடுவன், அவன் அன்பு நிலையற்றது, உண்மையற்றது என்பதை உணர்ந்தும், அப் பரத்தையர் அவன் உறவை விரும்பினர். அவன் விரும்பும் பரத்தையரை அவன் வேண்டும் காலத்தில், அவன் விரும்பும் இடத்திற்கு ஏற்றிக் கொணரும் அவன் தேரைக் காணும் அவ்வூரார், “பரத்தையரை அகப்படுத்தும் பெரிய வலை அவன் தேர்!’ எனக் கூறிப் பழிப்பதை அறிந்தும், அதற்கு நாணாது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/60&oldid=1129494" இலிருந்து மீள்விக்கப்பட்டது