பக்கம்:மருதநில மங்கை.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84புலவர் கா. கோவிந்தன்


இந் நிகழ்ச்சியை நினைவூட்டும் இயற்கை நிகழ்ச்சி ஒன்று ஓர் ஊரில் நிகழ்ந்தது. அவ்வூரை அடுத்திருந்தது ஒரு பொய்கை. அப்பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களில், தும்பிகள் தம்தம் பெடையோடு தேன் உண்டு வாழ்ந்திருந்தன. ஒரு நாள் அப் பொய்கையின் கரை திடுமென உடைத்துக் கொள்ளவே, அவ்வுடைப்பின் வழியே வெள்ள நீர் உட்புகுந்து விட்டது. தாமரை மலர்களெல்லாம் தண்ணீருள் மறைந்து விட்டமையால், அங்கு வாழ்தற்கு வழியற்றுப் போன அத்தும்பிகள், அக்குளத்தை விட்டு நீங்கி, அதை அடுத்திருந்த, காவல் நிறைந்த கரை அமைந்த பிறிதொரு பொய்கையைத் தேடி அடைந்து, ஆங்குள்ள மலர்களில் வாழத் தொடங்கின. இதற்கிடையில், முற்கூறிய பொய்கைக்கு உரியோர், ஓடோடி வந்து, உடைந்த உடைப்பினை அடைத்துப் புகுந்த புதுப்புனலைப் போக்கி விட்டனர். தாமரை மலர்கள் பண்டேபோல், தண்ணீர் மட்டத்திற்கு மேல் தலைதூக்கி நிற்கத் தொடங்கின. அஃதறிந்த அத்தும்பிகள், மீண்டுவந்து, தம் மலர்களுட் புகுந்து மகிழ்ந்து உறங்கின.

இக் காட்சியைக் கண்டு நின்றாள் ஒரு பெண். கணவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டமையால் கலங்கி யிருப்பவள் அவள். அன்று அவள் கண்ட இக்காட்சி, அவள் உள்ளத்தில் பற்பல எண்ணங்களைத் தோற்றுவித்தது. வாழும் இடம், வாழ்தற்கு இயலாது போனமையால், வண்டுகள் அவ்விடத்தை விட்டன. ஆனால் என் வீடு இன்பக் களஞ்சியமாய் இருக்கவும், என் கணவன் அதை மறந்தான். சென்ற இடம், வாழ்ந்த இடத்தினும் சிறந்து விளங்கினமையால், வண்டுகள் ஆங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/86&oldid=1129647" இலிருந்து மீள்விக்கப்பட்டது