பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
XVI

எனது விருப்பம்; வேண்டுகோள். மேலே கண்டிருப்பது நான் 25-1-62 இல் வெளியிட்ட 'தமிழால் முடியும்' என்ற நூலின் முடிவுரை.

கடந்த 35 ஆண்டுகளில் பல தமிழன்பர்கள் நான் அன்று கண்ட கனவை நனவாக்க முயற்சி எடுத்து சிலர் வெற்றியும் கண்டுள்ளனர். அவர்களில் முதன்மை பெற்று விளங்குபவர் திரு மணவை முஸ்தபா அவர்கள். உலக அளவில் பன் மொழிகளில் வெளிவரும் 'யுனெஸ்கோ கூரியர்' என்ற மாதப் பத்திரிகையைத் தமிழாக்கி தமிழ் மக்களுக்கு வழங்கி வருகிறார். பல நுண்ணிய நவீன கருத்துக்களையும் தமிழில் கூற முடியும் என்பதை நிரூபித்துக்காட்டி வருகிறார். இதன் மூலமாக புதிய தமிழ்ப் பதங்களையும் உருவாக்கி தமிழின் வளத்தை பெருக்கி வருகிறார். இது மணவை முஸ்தபா அவர்கள் தமிழ்த் தாய்க்கு ஆற்றும் மாதாந்திரப் பணியாக அமைந்துள்ளது.

இதோடு திருப்தி அடையாமல் தமிழில் அறிவியல், தொழில் நுட்ப நூல்களை பலர் எழுதுவதற்கு உதவும் முறையில் பல கலைச்சொல் கனஞ்சியங்களை பெருமுயற்சியுடன் சிறந்த முறையில் வெளியிட்டு வருகிறார். தற்போது 'மருத்துவக் கலைச்சொல் களஞ்சிய'த்தை வெளியிட முன் வந்துள்ளார். இக் களஞ்சியத்தின் சிறப்பை மருத்துவ நிபுணர் பேராசிரியர் டாக்டர் லலிதா காமேஸ்வரன் அவர்கள் தன்னுடைய ஆய் வுரையில் விளக்கியுள்ளார். இக்களஞ்சியம் தமிழில் பல மருத்துவ நூல் வெளிவர உதவுமென நம்புகிறேன்.

திரு மணவை முஸ்தபா அவர்கட்கு எனது நல்வாழ்த்துக்கள்

சி.சுப்பிரமணியம் (முன்னாள் நிதியமைச்சர் மத்திய அரசு மற்றும் ஆளுநர். மகாராஷ்டிர மாநிலம்).