பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13

முடையவர் என்பதைக் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக கண்டு வருகிறேன். மலேசிய மண்ணில் இரு பெரும் உலகத் தமிழ் மாநாடுகளை சீரும், சிறப்புமாக நடத்திய பெருமைக் குரிய பெருந்தகை. பன்னாட்டுத் தமிழ் இணையதள மாநாட்டை கோலாலம்பூரில் சிறப்பாக நடத்தி பன்னாட்டுத் தமிழ் இணையதள முயற்சியில் உலகளவில் தமிழுக்கு தனித்துவ நிலை கிடைக்க வழிவகுத்தவர்.

'யார்?' என்று பாராது 'என்ன?' என்பதில் கருத்துன்றிச் செயல்படும் இயல்பினரான இப்பெருந்தகை, தமிழ் வளர்ச்சிக்கு, தமிழர் நலனுக்கு உழைப்பவர்கட்கு துணை நிற்பதில் பெருமகிழ்வும், மனநிறைவும் கொள்பவர். இவரது அன்பாலும் உதவி ஒத்துழைப்பாலும் எனது 'கணிணி களஞ்சிய அகராதி' இரண்டாம் தொகுதி வெளிவந்தது போன்றே, இம் 'மருத்துவக் களஞ்சியப் பேரகராதியும்' வெளிவருகிறது. இவரது உதவியும், ஒத்துழைப்பும் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான மாபெரும் உந்துவிசை என்பது வரலாற்றுப் பதிவாகும். இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால் கம்பனுக்கு சடையப்ப வள்ளல் வாய்த்தது போல் என் அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணிக்கு ஆதரவு தரும் பெருந்தகையாக வாய்த்தவர் டத்தோஸ்ரீ ச. சாமிவேலு அவர்கள் எனக் கூறுவதில் பெருமையடைகிறேன்.

எனது கலைச்சொல் களஞ்சிய அகராதி வெளியீட்டுப் பணிக்கு மாபெரும் உந்துவிசையாக இருந்து வருபவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதே போன்று எனது அறிவியல் தமிழ்ப் பணிக்குத் தோன்றாத் துணையாக இருந்து வருபவர் இனமான பேராசிரியர் க. அன்பழகனார் அவர்கள். அவர்கள் மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் நூலுக்கு வழங்கியிருந்த சிறப்புரையை, அந்நூலின் விரிவாக வெளிவரும் 'மருத்துவக் களஞ்சியப் பேரகராதிக்கும்' பொருந்துவதால் இந்நூலிலும் அதனை இடம்பெறச் செய்துள்ளது பொருத்தமெனக் கருதுகிறேன்.