பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22

வரும் புதிய உண்மைகளையும் நுணுக்கங்களையும் உடனுக்குடன் மொழிபெயர்ப்புச் செய்து தமிழில் அரங்கேற்றும் கடமையைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்.

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் வகைப்படுத்தப் பட்டிருந்த அறிவியல் துறைகள் இன்று மேலும் பல கிளைகளாக விரிவடைந்திருப்பது மட்டுமின்றி, கடந்த ஒரு நூற்றாண்டில் அறிவியல் எய்திய வளர்ச்சி விகிதத்தை இந்த நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளிலேயே எட்டி யுள்ளது. இன்றோ அதைப் போன்று மேலும் பல மடங்கு விரைவுடன் அறிவியல் வளர்ந்து வருகின்றது. அது உலகத்தின் பல நாடுகளிலும் (சில மொழிகளிலும்) நாளும் உருவாகிவரும் அறிவியல் வளர்ச்சியின் விரைவு என்பதால், நாம் அந்த விரைவுக்கு ஈடுகொடுக்கும் சூழலில்லை. எனினும் அவற்றின் பயனை நாமும் உடனுக்குடன் பெறுவதற்கு இன்றியமையாத மொழிபெயர்ப்புத் திறனை மிகப் பெரிய அளவில் மட்டுமின்றி, விரைவாகச் செய்திடவல்ல கணிப்பொறிப் பயன் பாட்டையும் மேற்கொண்டு நிறைவேற்றிட முனைய வேண்டும். அப்படிப்பட்ட வழிமுறைகள் மேற்கொள்ளப் பட்டாலன்றி, நமது முன்னேற்றம் மட்டுமன்றி, வாழ்க்கை நிலையும் மேலும் பின்னடைவுக்கு ஆளாகி, நாம் உலகோரால் கருதப்பட வேண்டாதவர் ஆவோம்.

இதைத் தெளிவாக உணர்ந்தவர் திரு.மணவை முஸ்தபா. அறிவியல் கருத்தைத் தமிழில் தர முடியுமா? மாணவர்களின் அறிவியல் பயிற்சி மொழியாகும் தகுதி தமிழுக்கு உண்டா? இருப்பினும் பயன்படுமா? என்றெல்லாம் ஐயுறவு எழுப்பியவர்கட்கெல்லாம் - தகுந்த விடை அளித்தவர் அவர்.

"தமிழில்" எந்தத் (அறிவியல்) துறைச் செய்தியையும், சொற்செட்டோடும் பொருட்செறிவோடும் கூற முடியும், எத்தகைய அறிவியல்நுட்பக் கருத்துக்களையும், தெளிவாகவும் திட்பமாகவும் சொல்ல முடியும். ஏனெனில் தமிழ் கடந்தகால மொழி மட்டுமல்ல; நிகழ்கால மொழியுமாகும் ஆற்றல்மிக்க