பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7

போடும் மருத்துவக் களஞ்சியப் பேரகராதி எனும் பெயரில் இந்நூல் வெளிவந்துள்ளது.

எனினும், இதற்கான அடித்தளம் நாற்பத்தைந்தாண்டுகட்கு முன்பே என் உள்ளத்தில் அழுத்தமாகப் போடப் பட்டிருந்ததை இந்நேரத்தில் நினைவு கூராமல் இருக்க முடியவில்லை.

இன்றைக்குச் சரியாக நாற்பத்தைந்து ஆண்டுகட்கு முன்பு, 'Wonder Drugs’ எனும் ஆங்கில மருத்துவ நூலை தென்மொழிகள் புத்தக நிறுவனத்துக்காகத் தமிழில் பதிப்பிக்கும் பணியை நான் மேற்கொண்டபோதுதான், தமிழைப் பொறுத்தவரை இம்முயற்சியில் நாம் எங்கே நிற்க வேண்டியுள்ளது என்பது எனக்குத் தெளிவாகப் புலப்பட்டது. அந்நூலை வெளியிட்டதனால் நான் பெற்ற பட்டறிவு மிகவும் பயனுள்ளதாயமைந்தது. உயிரியல் என்ற நூலையும் யுனெஸ்கோ கூரியர் திங்களிதழில் தொடர்ந்து 1970இல் புற்றுநோய் பற்றியும் அடுத்து 1972இல் இதய நோய் பற்றியும் சிறப்பிதழ்களை தமிழில் வெளியிடும்போது மருத்துவத்தைத் தமிழில் சொல்லும்போது எதிர்ப்படும் இடர்ப்பாடுகள் என்னென்ன என்பது புலனாகியது.

மருத்துவ நூல்கள் தமிழில் நிறைய வெளிவரவேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறோம். ஆனால், பிற மொழிகளில் வெளிவரும் அளவுக்கு அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவ நூல்கள் தமிழில் வெளிவருவதில்லை. இதற்கு என்ன காரணம்?

நம்மிடையே அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவத் துறைகளில் பொருளறிவும் தமிழறிவும் எழுத்துத் திறனும் மிக்கவர்கட்குப் பஞ்சமில்லை. இத்துறைகளைப் பற்றித் தமிழில் தெளிவாகவும் திட்பமாகவும் விளக்கிக்கூற முடியும் என்ற ஆர்வத் துடிப்பினர் பலருண்டு. அவர்கள் எழுதவும் முனைகிறார்கள். அப்போது அவர்கள் முயற்சிக்குப் பெரும் முட்டுக்கட்டையாக வந்தமைவது கலைச்சொற்கள் (Technical