பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

மருத்துவ விஞ்ஞானிகள்



இதற்கு மேல் இந்தச் சிற்றுாரில் என்னதான் மாடாய் உழைத்தாலும் போதிய வருவாய் வாராது என்பதை உணர்ந்த ஜோசப் பாஸ்டியர், தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு எங்கு சென்றால் போதிய வருவாய் வரும் என்று சிந்தித்தார்.

தனது மனைவி ஜீன் எடினட் ரோக்யீயுடன் சிறுவன் லூயி பாஸ்டியருடன், ‘ஆர்பாய்’ எனும் வேறோர் சிறு நகருக்குச் சென்றார்.

அந்த நகரத்துச் சூழலுக்கு ஏற்றவாறு, சிறு வீட்டொன்றை அமைத்துக் கொண்டு, அங்கேயும் தனது பரம்பரைத் தொழிலான தோல் பதனிடும் தொழிலையே செய்து வந்தார். அவருக்கு உறுதுணையாக மனைவி ரோக்யீ கடுமையாக உழைப்பதுடன் இல்லாமல், சிறு குழந்தையான லூயி பாஸ்டியரையும், கணவன்மனைவி இருவரும் எந்தவிதக் குறைபாடுகளும் நேராதவாறு வளர்த்து வந்தார்கள்.

லூயி பாஸ்டியரின் தந்தையும் அவரது மனைவி ஜீன் எடினட் ரோக்யீயும் மிகக் கஷ்டப்பட்டுத் தனது மகனைப் படிக்க வைக்க, இரவும் பகலும் தங்களது குலத் தொழிலான தோல் பதனிடும் தொழிலோடுப் போராடி உழைத்துப் பணம் பெற்றுப் படிக்க வைத்தார்கள் - தங்களது மகனான லூயி பாஸ்டியரை

அவர்கள் அவ்வாறு படிக்க வைத்ததற்கு என்ன காரணம் தெரியுமா? லூயி பாஸ்டியர் தந்தை ஜோசப் பாஸ்டியர் மாவீரன் நெப்போலியனது போர் படையிலே தளபதியாக இருந்தாரே தவிர, அதற்குத் தனது கல்வி பலமல்ல காரணம்! வீரம், தீரம், திறமை, போர்த் தந்திர சுபாவங்களே காரணமாக அமைந்திருந்தன.

எனவே, லூயி பாஸ்டியர் பெற்றோர்கள் கல்வி கற்றவர்கள் அல்லர்! ஆனாலும், தனது குலத் தொழிலிலே சிரமமப்பட்டு தேடிய பணத்தைக் கொண்டு அவர்கள் தனது மகனை ஆர்பாய் என்ற நகரிலே உள்ள பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார்கள்.

கல்வியில் லூயி பாஸ்டியர் மிகச் சிரத்தைக் காட்டிச் சுமாரான மதிப்பெண்களைப் பெற்று நடுத்தரமான ஒரு மாணவனாக அவர் திகழ்ந்து வந்தார்.