பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

மருத்துவ விஞ்ஞானிகள்


ஆனால், நுரையீரல் பற்றிய குறிப்பே கேலன் ஆராய்ச்சியில் குறிப்பிடப்படவில்லை.

கேலன் கண்டுபிடித்தது என்னவென்றால், “இதயத்தின் இடது பக்கத்துக்கு ரத்தம் வந்து, அங்குதான் அது காற்றுடன் கலந்து உயிர்ச் சக்தி பெறுகிறது” என்பதுதான்.

மருத்துவ மேதை கேலன் என்பவருக்கு எதிராக, ஓர் அரிய கருத்தைக் கூறினார் செர்விட்டஸ் என்பதற்காக, அவர் மீது மற்ற மருத்துவர்கள் தீராக் கோபம் கொண்டு, அவரை 1553-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் உயிரோடு கொளுத்தி எரித்துச் சாம்பலாக்கி விட்டார்கள் மத குருமார்கள். அத்தோடு மட்டுமா விட்டு விட்டது. கிறித்துவ தேவாலய ஆதிக்கம்? அவர் ஆராய்ச்சி செய்து எழுதி வைத்திருந்த குறிப்புகளை எல்லாம் தீ வைத்துக் கொளுத்திவிட்டது.

அஞ்சா நெஞ்சன் ஆர்வி துணிவு!

இந்த உயிர்க் கொலைக்குப் பிறகு, எந்த மருத்துவ விஞ்ஞானியும், இதயம் என்ற பேச்சையே பேசுவதற்கு பயந்து போய் மேற்கொண்டு எந்த ஓர் ஆராய்ச்சியிலும் ஈடுபட முன்வர மறுத்து விட்டார்கள்.

இந்த உயிர்க் கொலையைப் பற்றி எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு படித்த வில்லியம் ஹார்வி என்ற மேதை, கொஞ்சமும் பயப்படாமல், வீரமான நெஞ்சம் படைத்த ஒரு விஞ்ஞானியாக, மருத்துவ உலகிலே மீண்டும் இதயம் பற்றி ஆராய்ச்சி செய்த மேதையாக விளங்கினார் என்றால், வில்லியம் ஹார்வி எப்படிப்பட்ட அஞ்சாநெஞ்சுர ஆராய்ச்சியாளராக இருந்தார் என்பதைச் சற்றே நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் அல்லவா?

எனவே, செர்விட்டஸ் உயிர்க் கொலையைக் கண்டு பயந்து, இதயம் என்றால் என்ன என்பது பற்றி வாய் திறவாமல் வாழ்ந்த மருத்துவ உலக விஞ்ஞானிகள் எல்லாம், தங்களது ஆராய்ச்சிக்கே, ஏன் விஞ்ஞான அறிவுக்கே பகையானார்கள்.