பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

29




இதயத்தைப் பற்றியும், அதன் மர்மங்களையும் கண்டு பிடித்த ஓர் அறிவின் மேதையை - மனங் கூசாமல், மனசாட்சிக்கு விரோதமாக அவருக்குக் ‘கிறாக்’ என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.

இதயாசனத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டிய ஒரு மருத்துவ ஞானியை, எந்தெந்த முறைகளில் எல்லாம் அந்த மேதையின் புகழைச் சீர்குலைக்க முடியுமோ - அந்தந்த அளவில் விடாமல், ‘அறை பறை அன்னர் கயவர்’ என்று நமது திருவள்ளுவர் பெருமானது மொழியைப் பொய்யாக்காமல் மெய்ப்பித்துக் காட்டி வெற்றியும் பெற்றார்கள் - கயவர்கள் பலர்!

வில்லியம் ஹார்வி புகழ் அதனால் குன்றிய ஒளியானது: சிகிச்சைப் பெற வரும் வாடிக்கையாளர்கள் மறந்து விட்டார்கள் ஹார்வியை! யார்யார் முன்பு ஹார்வியின் மருத்துவ நோயாளி வாடிக்கையாளர்களோ, அவர்கள் வற்றிய குளத்தைவிட்டுப் பறந்தோடி வேறோர் தடாகம் தேடும் பறவைகள்; ஆனார்கள்! இவ்வளவு இடையூறுகளையும் தைரிய நெஞ்சினரான ஹார்வி எதிர்த்து நிற்கும் விண்நோக்கிய சிகரமானார்!

என்றாவது ஒரு நாள் காற்றுத் திரும்பியும் நம் பக்கம் அடிக்கும் என்ற மன வைராக்கியத்தோடு ஹார்வி காத்திருந்தார். உண்மை என்றும் சாகாது என்று நம்பிய ஹார்வியின் வீர நெஞ்சுரம் வெற்றி பெறும் நாட்களும் வந்தன.

வில்லியம் ஹார்வி, ரத்த ஓட்டத்தைப் பற்றியும், இதயத்தின் இயக்கத்தைக் குறித்தும் என்னென்ன ஆய்ந்து அறிவித்தாரோ, அவை எல்லாமே உண்மைகள் என்பதை மருத்துவ உலகம் மலை மேல் ஏறி ஒப்புக் கொண்டது.

உலகெங்கும் உள்ள மருத்துவ மனைகள் எல்லாமே, ஹார்வியின் கண்டுபிடிப்புகளையே பின்பற்ற ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்றன.

கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் மருத்துவ உலகம், இதயம் என்றால் அது ஒரு மனித உடலுறுப்பு என்றுதான் புரிந்து வைத்திருந்ததே தவிர, இதயத்தின் அமைப்பு எப்படி இருக்கும்?