பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

மருத்துவ விஞ்ஞானிகள்



மாணவர்களின் சுட்டித்தனம்!

கிராமர் பள்ளியிலே இருந்து பலாத்காரமாக வெளியேற்றப் பட்ட ஆஸ்லர், பர்ரீ என்ற இடத்திலே இருக்கும் உணவு, தங்கும் விடுதி, வசதியுள்ள பள்ளியிலே சேர்க்கப்படடான். அங்கேயும் ஆஸ்லர் தனது குறும்புக் கொடியை பள்ளியளாவப் பறக்க விட்டான். அதனால் சுட்டிகள் தலைவன் என்ற பெயரை மிகச் சுலபமாகப் பெற்றான். அங்கே தங்கி அவன் கல்விக் கற்றபோது தனது வீரத்தை எல்லாம் காட்டினான்.

ஆஸ்லர் செய்கின்ற குறும்புகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருந்தன. அந்தப் பள்ளி அருகே ஸ்மித் எனபவருக்கு ஒரு தோட்டம் இருந்தது. பழங்கள் கனிந்து குலையாகத் தொங்கிக் கொண்டிருக்கும் தோட்டம். பார்ப்பவர் கண்களைப் பறித்திழுக்கும் தோட்டம் அது. அப்படிப்பட்டத் தோட்டத்திலே யாரும் நுழைவதில்லை. இது எல்லாம் ஆஸ்லர் அந்தப் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு முன்பு இருந்த நிலை.

ஆஸ்லர் அந்தப் பள்ளியில் சேர்ந்தவுடன் அத் தோட்டத்தின் நிலை மாறி விட்டது. அவனை அந்தத் தோட்டத்துக் கனிகள் கவர்ந்து இழுத்தன. பழங்கள் திருடு போயின.

தோட்டத்துக்கு உரிமையாளரான ஷெரீப் காவலைப் பலப்படுத்தினார். ஆஸ்லரும் அவனைச் சார்ந்த சுட்டி மாணவர்களும் தோட்டத்துப் பழங்களைத் திருடினார்கள். ஒரு நாள் அந்தத் திருட்டு மாணவர்கள் ஷெரீப்பிடம் பிடிப்பட்டார்கள். கடுமையான தண்டனை தருமாறு பள்ளி நிர்வாகிகளை ஷெரீப் கேட்டுக் கொண்டார்.

திருட்டு மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கல்

ஆஸ்லரும் மற்ற மாணவர்களும் தண்டிக்கப்பட்டார்கள். அதாவது, அவனும் - அவனது நண்பர்களும் பள்ளியை விட்டு நீக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பட்டார்கள். பெற்றோர்கள் என்ன செய்வார்கள் மனம் வருந்தினார்கள்.