பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மர இனப் பெயர்கள்

கோகில நயனம்: கோகிலம் = குயில்; நயனம் - கண், முள்ளுக் கத்தரிக்காய் குயிலின் கண்போன்றிருத்தலின் கோகில நயனம் எனப்பட்டது. ஒப்புமை.

கோதை மாதவி: குருக்கத்திக் கொடிக்கு மாதவி என்னும் மற்றொரு பெயரும் உண்டு. எனவே, சொல் விளையாட்டாகக் குருக்கத்தி கோதை மாதவி' எனப் பட்டது. சிலப்பதிகார மாதவியையும் குறிக்கும் இது இரு பொருள் நயம் உடையது. கோதை=பெண்.

கோரக்கர் மூலிகை கோரக்கர் என்னும் சித்தரும் உட்கொண்டதால், கஞ்சா, கோரக்கர் மூலிகையாயிற்று. சார்பு.

சக்களத்தி (சககளத்தி): ஒரு மர இனம் வளர்வதற்குத் தடையாயுள்ள புல்லுருவிகளும் களைகளும் சக்களத்தி எனப்படுகின்றன. குடும்பத்தில் சக்களத்திகள் சிலர், ஒருவர் வளர்ச்சிக்கு மற்றொருவர் இடையூறாய் இருக்கின்றனர் அல்லவா? ஒப்புமை.

சரசுவதி: இப்பெயர் வல்லாரைக்குத் தரப்பட்டுள்ளது. வல்லாரைப்பூடின் இலையை உண்டால், நினைவாற்றல் பெருகும்; மூளை வலிமை அடையும், அதனால் கல்வி நலம் சிறக்கும். வல்லாரை உண்டவர்கள் கல்லாரைப் போல் கலங்காமல் கற்றாரைப் போல் நலம் பெறுவர். எனவே, கல்விக்கு உரியவளாகிய சரசுவதியின் பெயர் வல்லாரைக்கு வைக்கப்பட்டது. ஒப்புமை.

தேரன் வெண்பா:

' வல்லாரைக் கற்பமுண வல்லாரை யார்நிகர்வர் கல்லாரைப் போலக் கலங்காமல் - வல்லாரைச் சாறும் இலவணமும் சாபத் திரியுமுண்ணப் பேருமடி வல்லைப் பிணி ” எனவே, வல்லாரை சரசுவதியாயிற்று.