பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மர இனப் பெயர்கள்

நிதி நாயகன்: இது வெட்டி வேரின் பெயராகும். வெட்டி வேரின் அடியில் உள்ள வேரை வெட்டிக் கழித்து நடுப்பகுதியை நட்டால் மீண்டும் முளைக்கும். வேரை வெட்டுவதால் மீண்டும் முளைப்பது இந்த இனமாதலின், இதற்கு வெட்டிவேர் எனும் பெயர் தரப்பட்டிருக்கலாம். ‘வெட்டுவேர்” என்னும் பெயர் பிங்கல நிகண்டில் கூறப் பட்டுள்ளது. இனி, இதற்கு நிதிநாயகன் என்ற பெயர் வந்தவாற்றைக் காண்போம்:

வெட்டி என்னும் சொல்லுக்குக் காசு (பணம்) என்னும் ஒரு பொருள் உண்டு. பழங்காலத்திய ஒருவகை வரிக்கு ‘வெட்டி என்னும் பெயர் உண்டு. இந்த வரி, வெட்டி வரி, வெட்டி வேதினை, வெட்டிப் பாட்டம்-என்றெல்லாம் சொல்லப்படும். இப்பெயர்களைக் கல்வெட்டுகளினால் அறியலாம்.

“ வெட்டிப்பாட்டமும்.....எப்பேர்ப்பட்ட

இறைகளும் உட்பட'.

என்பது ஒரு கல்வெட்டுப் பகுதி. பாட்டம், இறை என்பன வரி என்னும் பொருளன. அக்காலத்துக் காசு (நாணயம்) பொன்னாலும் வடிக்கப்பட்டிருந்தது என்பதை நினைவு கூரவேண்டும். மண்ணை வெட்டி உழுது பயிரிடுதலே முதல் தொழில் ஆதலின், வருவாய்க்கு வெட்டி என்னும் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். அப்பொழுது வெட்டுதல் தொழில் முதன்மை பெற்றிருந்தது. இப்போதுகூட, வாளா காலங்கழிப்பவரை நோக்கி, 'இவர் ரொம்ப வெட்டறாரே! நீ வெட்டினது போதும்’ என்று சொல்லப் படுவது காண்க. காடுவெட்டி நாடாக்கியதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது.