பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோடேறிக் குடிமுடித்த படலம்

105

வக்கில் வீட்டில் வரிக்கல்[1] பிடுங்கப்
போவதும் எத்தனை புத்திகேடு. ஐயா! 365
தங்கை மக்கள் தரித்திரம் அடைந்து
வயிற்றுக்கு இன்றி வாடி யலைய
வருக்கை மாம்பழம் வாழைப் பழமும்
பெட்டிப் பாலும் பிஸ்கூத் துகளும்
ஊரார் மக்கள் உண்டு களித்திட 370
வாங்கிச் செல்வது மதியுளார் செயலோ?
மேடும் காடும் வெட்டித் திருத்திப்
பாறையும் உடைத்துப் படுநில மாக்கிப்
பருவம் அறிந்து பண்பட உழுது
மண்ணலம் உணர்ந்து வளமிகப் பெய்து, 375
வாசிறை மீண்டான்[2] வளரச் செய்து,
சம்பாப் பயிரைத் தழைக்கச் செய்து
காலா காலத்தில் களைகள் எடுத்து
வேலியைக் கட்டி விலங்கினம் விலக்கிப்
பறைகளைக் கொட்டிப் பறவையை ஒட்டி. 380
நீரும் பாய்ச்சி, நிதமும் இராப்பகல்
உறக்க மின்றி உழைப்பத னாலே
விளையச் செய்த மேனிநெல் எல்லாம்,
வக்கீல் வீட்டு வாயிலிற் கொண்டுபோய்
விரித்துக் காய்ச்சி வீசித் தூற்றி 385
அளந்து வாரி அறைக்குட் போட்டு
வெறுங்கை யோடு வீடு போய்ச் சேரும்
நம்மவர் போல் இந் நானிலத் தெங்கும்


  1. 364. வரிக்கல் - நீளமாக அடித்துத் திருத்திய கல்.
  2. 396. வாசிறை மீண்டான்! ஒருவகை நெல்,