பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

மருமக்கள்வழி மான்மியம்

அரங்குக்;[1] கதவை அடைத்துப் பூட்டிவை; 90
தட்டுக்[2] கதவையும் சங்கிலி யிட்டுவை;
சாய்ப்புக் கதவிலும் தாழைப் போட்டுவை
பொதிய மலையும் பொட்டண மாகிப்
புழைக்கடை[3] வழியாய்ப் போய்விடும், அப்பா!
ஐயா வரும்வரை அங்கே நீதான் 95
கருத்தாய் நின்று காத்திட வேண்டும்.
இந்தா பூட்டுகள். இவையும் போதுமா?
அதிகம் வேண்டுமோ? அறிந்துசொல் அப்பா"
என்று இப் படியாய் எக்கா ரியங்களும்
சரியாய்ப் பார்த்துச் சட்டம் கட்டி, 100
அரங்கு நடையின் அருகாய் ஓர் மலைப்
பாம்பு போலப் படுத்துக் கொண்டாள்.
நினைக்க நினைக்கஎன் நெஞ்சு வேகுதே
ஐயோ! சிவசிவ! அரஹர! அரஹர!
போதும், போதும், இச்சன்மம் போதும்; 105
பட்ட துயரமும் பாடும் போதும்.
கணவர்க்கு அந்திய காலம், தண்ணீர்
குடிக்கும் பாத்திரம் குடுக்கை யானதும்,
பரந்த சட்டி படிக்க மானதும்,
பாலும் அன்னப் பாலேயானதும்[4], இனி 110
எடுத்துச் சொல்வது ஏனோ? அம்மா!
மருமக் கள்வழி வந்து பிறந்தவர்க்கு
ஏதும் புதுமை இவற்றில் உண்டோ?


  1. 90-92. அரங்கு - தட்டு, சாய்ப்பு - வீட்டின் பாகங்கள்,
  2. 91. தட்டு - மேல்மாடி.
  3. 94. புழைக்கடை - புறக்கடை; வீட்டின் பின் வாயிற்புறம்.
  4. 110. அன்னப்பால்- உலையிலுள்ள கொதி நீர், கஞ்சி.