பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

17

களினால் பெண்களின் நிலைமை பெரிதும் பரிதபிக்கத் தகுந்ததாயிருந்தது.

இந்நிலைமைகளையெல்லாம் நோக்கி, தங்களுக்குரிய அவகாசக் கிரமம் பற்றிய சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென்ற கருத்து நாஞ்சினாட்டில் முற்போக்கில் அவாவுள்ள மக்கள் மனத்தில் தோன்றிற்று. இக்கருத்து 30 ஆண்டுகட்கு முன்னர் மிகவும் பிரசார மெய்தியது. முற்போக்கில் ஈடுபடாத ஒரு சிலர் இதனை ரகசியமாக எதிர்க்கத் தலைப்பட்டனர். நாஞ்சினாடு இருபிளவு பட்டது. ஆனால் முற்போக்காளரே முடிவில் வென்றனர்.

ஸ்ரீ சி. தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் முற்போக்காளரில் முதன்மை பெற்றவர். ‘மலபார் குவார்ட்டர்லி ரிவியூ’ என்ற பத்திரிகையில் இவர்கள் நாஞ்சினாட்டு வேளாளரைக் குறித்து எழுதிய ஆங்கிலக் கட்டுரை அதுகாறும் உறங்கிக் கிடந்த வேளாளரின் கண்களைத் திறந்து விழிக்கச் செய்தது. பிள்ளையவர்களுடைய தூய உள்ளமும் சீரிய நோக்கமும் மனத்தைக் கவர்ந்தன. நாஞ்சினாட்டு வேளாள சமுதாயம் பலவகை இன்னல்களும் நீங்கி அதற்குரிய உயரிய நிலையை அடைய வேண்டுமென்ற ஆழ்ந்த உணர்ச்சி அவர்களுடைய சம்பாஷணைகளிலும் எழுத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. அவர்கள் தமிழ் - இலக்கியங்களில் ஊறியவர்கள்: தமிழ் மக்களுடைய சரிதத்தை நன்குணர்ந்தவர்கள்; தமிழர்களுடைய உயர்ந்த லட்சியங்களிலும் ஒழுக்க நியதிகளிலும் ஈடுபட்டவர்கள்; ஆங்கிலக் கவிஞர்களின் அறிவுரைகளில் திளைத்தவர்கள்: பிற சமு-

ம.மர— 2