20
மருமக்கள்வழி மான்மியம்
ஐந்து வயசுப் பையனொருவன் மிகப் பெரியதொரு தலைப்பாகை கட்டிக்கொண்டு வயது முதிர்ந்தவன் போல் நடிப்பானானால், பார்ப்பவர்களுக்கு உடனே நகைப்பு வந்துவிடும். இப்படியே மிக்க ஆடம்பரமாகச் சட்டை முதலியன அணிந்து செல்பவன் அடிசறுக்கிக் கீழே விழுவானானால் உடனே நகைப்பு உண்டாய்விடும். பேச்சிலும் இப்படி நகையுண்டாவதற்குரிய சந்தர்ப்பங்களை எளிதில் பாவித்துக் கொள்ளலாம். ஆடுசாபட்டி அஷ்டாவதானம் அம்மையப்ப பிள்ளை தம் வீட்டில் திருடர்கள் புகுந்து களவாடிக் கொண்டிருக்கும்போது அவர்களைப் பார்த்து, ‘நீவிர் பிழைத்தீர்; இனிப் பிழையீர்’ என்று கூறுதலும், இதற்குப் பதிலாகத் திருடர்கள் அவரை அடிக்கச் செல்லுவதும் நகையுணர்ச்சியைத் தோற்றுவிக்காதபடி இருக்க முடியுமா? இவ்வுணர்ச்சியை எழுப்பக்கூடிய நூல்கள் தமிழில் பல இருக்கின்றன. பம்மல் சம்பந்த முதலியாரவர்கள் இயற்றிய ’சபாபதி’ என்னும் நாடகம் நகைச்சுவையிலே தோய்ந்திருக்கிறது. வில்லியப்ப பிள்ளையின் பஞ்ச லட்சணத் திருமுக விலாசம் நகைச்சுவையின் பொக்கிஷமாகவுள்ளது. வீரமா முனிவரின் பரமார்த்த குரு கதையில் நகைச்சுவை ததும்புகிறது. கம்பராமாயணம் முதலிய காவியங்களிலும் அங்கங்கே நகைச்சுவை குமிழியிட்டொழுகுகிறது. சங்கச் செய்யுட்களிலும் ஏகதேசமாய் இந்த நகைச்சுவை தலைக்காட்டி இன்பமூட்டுகிறது. உதாரணமாக,
திருந்திழாய் கேளாய் நம் ஊர்க்கெல்லாம் சாலப்
பெருநகை அல்கல் நிகழ்ந்தது