பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

21

என்ற கலித்தொகையைக் (65) காண்க. பத்திரிகையுலகிற்கூட நகைச்சுவை புகுந்துவிட்டது. இக்காலத்தே தமிழ்நாட்டில் நகைச்சுவை மலிந்த பத்திரிகைகளே இருபாலராலும் போற்றப்படுகின்றன. ஹாஸ்யத்தையே பெரும்பான்மை மக்கள் பெரிதும் விரும்புகிறவர்கள் என்பதை யுணர்ந்து சினிமாப்படக் கர்த்தர்களும் இந்தச் சுவையுடைய கதைகளையே படம் பிடிக்கின்றனர். ஆனால் இங்கே கூறிய நகைச்சுவைப் பகுதி யெல்லாவற்றிலும், ஆழ்ந்த உணர்ச்சி இல்லை; ஆழ்ந்த பொருளில்லை; நிலைத்த பயனில்லை. கணநேர மகிழ்ச்சியையே நமக்குத் தந்து அதனோடு ஒழிகிறது.

இகழ்ச்சிச் செயலும் இவ்வாறுதான். விருப்பு வெறுப்பு மக்களியற்கையில் ஒன்றிக் கிடப்பவையே. வெறுப்பின் உருவவேறுபாடே இகழ்ச்சி யென்பது. நமது தினசரி வாழ்க்கையில் இவ்இகழ்ச்சி அடிக்கடி புலப்படுவதொன்றே. இலக்கியங்களிலும் இது மிகுதியாகக் காணப்படுகின்றது. தமக்குப் பொருள் கொடாத ஒருவரைக் குறித்து ஒரு புலவர்.

பாரி ஓரி நள்ளி எழினி
ஆஅய் பேகன் பெருந்தோள் மலையன் என்று
எழுவருள் ஒருவனும் அல்லை, அதனால்
நின்னை நோவது எவனோ!
அட்டார்க்கு உதவாக் கட்டி போல
நீயும் உளையே நின்அன் னோர்க்கே;
யானும் உளனே தீம்பா லோர்க்கே;
குருகினும் வெளியோய் தேஎத்துப்
பருகுபால் அன்னஎன் சொல்உகுத் தேனே!
(தொல்-செய்யுளியல், 120, உரை)