பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

மருமக்கள்வழி மான்மியம்

காலத்து வாழ்ந்த சில இனத்தாரைப் பரிகசித்து இகழ்வதுதான் மிகுதியாகக் காணப்படுகிறது. இவ்வாறு இகழப்படுத்தற்குப் பெரும்பாலும் பெண்ணினத்தார்களும் துறவு வேடம் பூண்டவர்களுமே தக்கவர்கள் ஆவார்களென்று ஆசிரியர்கள் கருதினார்கள்.

பெண்களுடைய நடையுடை பாவனைகளையும் அவர்களுடைய சாகசத்தினையும் அறிவு நுட்பத்தினையும் ‘அளக்கவொண்ணா வஞ்சத்’தினையும் பற்றிப் பல நூல்கள் ஆங்கிலத்தில் முற்காலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. உதாரணமாக தாமஸ் டெக்கர் என்னும் கவிஞர் எழுதிய ‘பிரமசாரியின் விருந்து’ (Bachelor's Banquet) என்ற நூலைக் கூறலாம் நமது நாட்டில் பெண்களைப் பழித்துரைத்தலே பிற்காலத்தில்—ஜைன பௌத்த மதங்கள் ஓங்கி நின்ற காலத்தில்—பெரு வழக்கமாக ஏற்பட்டுவிட்டது.

புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்புற நாடின்வேறு அல்ல—புதுப்புனலும்
மாரி அறவே அறுமே அவரன்பும்
வாரி அறவே அறும்

(370)

என்ற நாலடிச் செய்யுளும்,

உண்டியுட் காப்புஉண்டு உறுபொருட் காப்புஉண்டு
கண்ட விழுப்பொருள் கவ்விக்குக் காப்புஉண்டு
பெண்டிரைக் காப்புது இலமென்று ஞாலத்துக்
கண்டு மொழிந்தளர் கற்றறிந் தோரே

என்ற வளையாபதிச் செய்யுளும் தக்க உதாரணங்களாம். இங்ஙனமே ஒரு பௌத்த பிக்ஷுவையும் ஒரு காபாலிகனையும் ‘மத்த விலாஸ ப்ரஹஸநம்’