பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

25

என்ற வடமொழி நாடகம் பரிகசிக்கிறது. வள்ளுவரும்,

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
(1073)

எனவும்,

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
(271)

எனவும் கயவர்களையும் கூடாவொழுக்கமுடைய துறவிகளையும் குறித்துக் கூறுகிறார்.

இங்ஙனம் பெண்டிர், பொய்த் துறவிகள் முதலாகிய இனத்தினர்களை இகழ்ந்துரைப்பதிலே அவர்கள் திருந்தவேண்டுமென்ற நோக்கமும் ஏற்பட்டு விட்டதாயின், அவ் இகழ்ந்துரை நம்மைச் சூழ்ந்துள்ள தீங்குகள் அறியாமை முதலியவற்றை நீக்குவதற்கு ஏற்ற நற்கருவியாகிவிடுகிறது. இகழ்ச்சியினால் உண்டாகக் கூடும் மனக் கசப்பு, அவ் இகழ்ச்சியோடு உடனொன்றி வரும் நகைச்சுவையினால் மாறிவிடுகிறது. நன்மை பெருகுதற்குத் தக்க வாய்ப்பு ஏற்படுகிறது. கோபத்தினால் கொறுகொறுக்கும் ஒருவன் முகத்திற்கெதிரே கண்ணாடியைக் காட்டுவது போன்ற பயன் விளைகிறது. ஆகவே நகைப்பு, இகழ்ச்சி நன்னோக்கம் ஆகிய மூன்றும் இயைந்து வரும் சரள காவியமொன்றே தமது கருத்திற்கு ஒத்ததெனப் பிள்ளையவர்கள் துணிந்தார்கள். இச் செய்யுள் வகையை ஆங்கிலத்தில் ‘ஸட்டயர்’ (Satire) என்று கூறுவார்கள். தொல்காப்பியர் ‘அங்கதம்‘ வசையொடும் நகையொடும் கூடியது என்று கூறி அது ‘செம்பொருள் - அங்கதம்‘, ‘பழி .